பாராளுமன்றத்தின் எதிர்கால செயல்பாடுகள் மற்றும் பாராளுமன்ற குழுக்களின் செயல்பாடுகள் குறித்து முக்கிய கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (05) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக இணைந்து செயற்படுவது தொடர்பாக எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வது இக்கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும்.
கடந்த ஜனவரி 29 ஆம் திகதியும் எதிர்க்கட்சிகளின் அனைத்துத் தலைவர்களும் சந்தித்து இதேபோன்ற விசேட கலந்துரையாடல் நடத்தப்பட்டது, இது அந்த கலந்துரையாடலின் தொடர்ச்சியாகும்.
இந்த சந்திப்பில் கயந்த கருணாதிலக, ஜே.சி. அலவத்துவல, அஜித் பி. பெரேரா, ரிஷாட் பதியுதீன், நாமல் ராஜபக்ஷ, திலித் ஜயவீர, தயாசிறி ஜயசேகர, ரவி கருணாநாயக்க, ஜீவன் தொண்டமான், சிவஞானம் சறீதரன், பி. சத்தியலிங்கம், ஏ. அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ரவூப் ஹக்கீம், நிசாம் காரியப்பர், வி. ராதாகிருஷ்ணன், அனுராத ஜயரத்ன, டி.வி. சானக, காதர் மஸ்தான் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.