சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுவிக்க சட்டமா அதிபரின் பரிந்துரையை எதிர்த்து இளம் பத்திரிகையாளர்கள் சங்கம் ஒரு போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, நாளை (06) நண்பகல் 12.00 மணிக்கு கொழும்பு சட்டமா அதிபர் திணைக்களத்தின் முன்பாக குறித்த போராட்டம் இடம்பெறவுள்ளது.
“குற்றவாளிகளைப் பாதுகாக்கும் சட்டமா அதிபர் வீட்டிற்குச் செல்ல வேண்டும்!” “லசந்த வழக்கின் சந்தேக நபர்கள் எவ்வாறு விடுவிக்கப்பட்டனர் என்பதை வெளிப்படுத்துங்கள்!” என்ற தலைப்பில் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.
நீதி தேடும் அனைவரையும் பங்கேற்க அழைக்கிறோம் என்று இளம் பத்திரிகையாளர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.
பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரை விடுவிக்க முடியும் என்று சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க சமீபத்தில் (ஜனவரி 27) குற்றப் புலனாய்வுத் துறைக்கு அறிவித்திருந்தார்.
இதன்படி பிரேம் ஆனந்த உடலகம, ஹெட்டியாராச்சிகே டான் திஸ்ஸசிறி சுகதபால, மற்றும் விதாரண ஆராச்சிகே பிரசன்ன நாணயக்கார ஆகிய மூன்று சந்தேக நபர்களுக்கும் மேலும் தொடர்ந்து சட்டத்தினை அமுலாக்க விரும்பாததால் அவர்களை விடுவிக்க முடியும் என்று சட்டமா அதிபர் கூறியுள்ளார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தால் ஜனவரி 27, 2025 அன்று சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவின் கையொப்பத்துடன் அனுப்பப்பட்ட இந்தக் கடிதத்தில் உள்ள உண்மைகளை அறிக்கையிடுமாறும், கடிதம் கிடைத்த 14 நாட்களுக்குள் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை நீதிமன்றத்திற்கு வழங்குமாறும் சட்டமா அதிபர் திணைக்களம் நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.