இலங்கை எதிர்கொள்ளும் இயற்கை இடர்களில் வெள்ளப்பெருக்கு முதன்மையானது. உயிரிழப்பு இடப் பெயர்வு, தொற்று நோய்களின் தாக்கம், என விளைவுகளின் பட்டியல் நீளமானது .கடந்த வருட இறுதியில் கொட்டித் தீர்த்த மழையினால் அழிவடைந்த பயிர்களின் தாக்கம் ,அரிசி விலையில் எதிரொலிக்கிறது.
இவ்வாறு ஒவ்வொரு வருடமும் பருவமழையினால் உண்டாகும் உயிர் மற்றும் பொருட் சேதங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவது வெள்ளப்பெருக்கு மீதான அச்சத்தையும் முன் நடவடிக்கைகளின் தேவையையும் உணர்த்தி உள்ளது. இலங்கையில் அதிக மழைப் பொழிவைப் பெற்று தரும் காலப்பகுதி இருவகையானது.அவை, தென்கிழக்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை எனப்படும்.இதில் தென்கிழக்கு பருவ மழை மே – செப்டம்பர் காலப்பகுதியில் பொழியும்.
இக்காலப்பகுதியில் மேல் , தென், சப்ரகமுவா ,மத்திய மற்றும் ஊவா மாகாணங்கள் அதிக மழை வீழ்ச்சியைப் பெறும். குறிப்பாக இரத்தினபுரி, நுவரெலியா, மாத்தறை, மாவட்டங்களில் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகும் .வட கிழக்கு பருவ மழை, ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் – ஜனவரி நீடிக்கிறது. இது இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் அதிக மழைப்பொழிவை ஏற்படுத்துகிறது. எனினும் வடமத்திய, ஊவா மாகாணங்களிலும் இதன் தாக்கம் உணரப்படும். குறிப்பாக வடக்கு கிழக்கு பருவமழைக் காலப்பகுதியில் கடுமையான மழை பொழிவு பதிவாகும் .விவசாய நீர்ப்பாசனத்திற்கு இக்காலப்பகுதி இன்றியமையாதது. எனினும் கடந்த சில வருடங்களாக இதனால் ஏற்ப்படும் வெள்ளப்பாதிப்பு, கடும் இழப்புகளை ஏற்ப்படுத்திவருகிறது.
வெள்ளப்பாதிப்பு
கடந்த வருட இறுதியில் “பெங்கல்” புயலால், வடகிழக்கில் ஏற்ப்பட்ட கடுமையான வெள்ள அனர்த்தம் 16 உயிர்களைக் காவுகொண்டதுடன் 300000 ற்க்கும் அதிகமானவர்களை நேரடியாகப் பாதித்தது. மட்டக்களப்பு ,அம்பாறை, திருகோணமலை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்கள் இதனால்க் கடுமையாகப் பாதிக்கப்பட்டது . தேசிய இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தரவுகளின் படி ,இந்த அனர்த்தத்தால் 98 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்ததுடன் , 2,333 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்தன.8984 குடும்பங்களைச் சேர்ந்த 29,596பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். வடகிழக்கில் அண்ணளவாக 338,000 ஏக்கர் பயிர்ச்செய்கை அழிவடைந்தது. அம்பாறை மாவட்டத்தில் 74000 ஹெக்ரயர் நெற்ப்பயிற்ச் செய்கை பாதிப்படைந்ததுடன் மன்னார் மாவட்டத்தில் 23000 ஹெக்ரயர் ஏக்கர் நிலம் பாதிப்புக்குள்ளானது.நீண்ட இடைவெளியின் பின் வடகிழக்கு மாகாணங்களில் இந்த வெள்ளப்பாதிப்பு , கடுமையான பாதிப்புகளை விட்டுச் சென்றது.
காரணங்களும் தீர்வும்
இலங்கையில் பருவ மழை காலங்களில் அதிகமான மழை வீழ்ச்சி கிடைக்கிறது .அளவுக்கு அதிகமான மழைப்பொழிவு வெள்ளத்தை உருவாக்குகிறது. சீரான வடிகாலமைப்பு வசதிகள் இல்லாமை, கால்வாய் அடைப்பு, மண்ணரிப்பு , அனுமதிபெறப்படாத கட்டிடங்கள், ஆகியவையும் வெள்ளப் பாதிப்பிற்க்கு காரணமாகின்றது. ” பெங்கல் புயலின்போது ஏற்ப்பட்ட பாதிப்பு, நேர்த்தியற்ற நகரக்கட்டமைப்புகளையும், குப்பைகளால் சூழப்பட்ட வடிகால்களையும் இனங்காட்டியது. குறிப்பாக யாழ்மாவட்டத்தில் , வெள்ளநீர் தேங்கியமைக்கான காரணங்களில் ஒன்றாக, அனுமதியின்றி பரவியிருந்த கட்டடங்களும் இடம்பெற்றிருந்தது. இதன்பின், முறையான அனுமதியின்றி கட்டப்டட கட்டடங்களை அகற்றுவதற்க்கான நடவடிக்கைகளை, வடமாகாணசபை மேற்க்கொண்டிருந்தது. பொதுவாக, இலங்கையில் உண்டாகும், வெள்ளப்பாதிப்பிற்க்கு முக்கிய காரணங்களில் ஒன்று, கனமழையின் போது தண்ணீரை உறிஞ்சும் சதுப்பு நிலக் காடுகள் அழிக்கப்படுவது. சுற்றுச்சூழலை சுரண்டி, அதற்காக அதிக விலை கொடுத்ததற்கான ஏராளமான உதாரணங்களை உள்ளன.. ஆறுகள் மற்றும் ஓடைகளில் கழிவுகள் கொட்டப்படுவது, மாவட்டங்களில் உள்ள சிறிய மற்றும் நடுத்தரக் குளங்களைப் புனரமைக்காமை, மணல் அகழ்வு, சட்டவிரோத மனிதநடவடிக்கைகள்,அதிகார மையங்களின் பொறுப்பற்ற நிலை. என்பனவும் முக்கியமானது .
காலநிலைமாற்றம்
உலகம் எதிர்கொள்ளும் தீவிரமான அச்சுறுத்தல்களில் காலநிலை மாற்றம் முதன்மையானது நிலையற்ற வானிலை, வெப்ப அதிகரிப்பு,வெள்ளப்பெருக்கு ,புயல், கடல் நீர் அதிகரிப்பு, பனிமலை உருகுதல், என காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் சகல நாடுகளையும் அச்சுறுத்துகிறது. இலங்கையிலும் இதன்தாக்கம், வெள்ளப்பெருக்கு, அதிகவெப்பம், புயல்பாதிப்பு ஆகியவற்றிலிருந்து உணரமுடிகிறது. அதிக மழைவீழச்சியால் உண்டாகும் மண்சரிவால் உயிர்கள் காவுகொள்ளப்படுவது, இலங்கையின் இன்னொரு இழப்பாகும். எனவே காலநிலை மாற்றம் மற்றும் வெள்ளப்பெருக்கு, காலநிலை மாற்றத்தின் அனர்த்த வடிவமாகும். இனிவரும் காலங்களில் இதன்தாக்கங்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் பிரகாசமானது. எனவே இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்க்கு இயற்கை வளங்களைப் பேணிக்காப்பது ஆரோக்கியமானது.
கடந்த ஆண்டு வெள்ள பாதிப்பினை பல்வேறு நாடுகள் எதிர்கொண்டது. குறிப்பாக கென்யா மற்றும் தன்சானியாவில் ஏற்பட்ட அனர்த்தத்தால் 300 பேர் இறந்தனர். கடந்த ஏப்ரலில்,84 வருடங்களின் பின் தான்சானியாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் 12 பேர் லட்சம் பேர் நேரடியாக பாதிக்கப்பட்டனர். ஜூன் மாதம் ,பங்களாதேஷில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 10 பேர் இறந்தனர். மீண்டும் ஓகஸ்ட் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் 79 பேர் இறந்ததுடன். இந்தியாவில் அசாம் மாநிலத்தில் கடந்த ஆண்டு யூனில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு 109 பேரைக்காவு கொண்டது. யூலையில், கேரளாவில் ஏற்பட்ட வெள்ள நிலச்சரிவால் 108 மரணங்கள் பதிவாகியது. இவ்வாறு உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தால் உண்டாகும் அனர்த்தங்கள், கடுமையான சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. எனவே இனிமேல் அதிகரிக்கப் போகும் இயற்கை பேரிடர்களை சமாளிப்பதற்கு இலங்கையர்கள் தயாராக வேண்டும்
அ.டீனுஜான்சி