இலங்கையின் தேசிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள யானை – மனித மோதலுக்கு பல்வேறு தீர்வுகள் தேடப்பட்ட பின்னணியில் அதற்காக விஞ்ஞான பூர்வமான தீர்வொன்றாக உள்நாட்டு யானை வேலிக் கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் தேசிய பொறியியலாளர் மற்றும் அபிவிருத்தி மத்திய நிலையத்தின் NERDC) பொறியியலாளர்களினால் சாத்தியமாகியுள்ளது.
இதன் முன்னோடித் திட்டமாக வீரவில திறந்தவெளி முகாமில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த யானை வேலிக் கட்டமைப்பை பூர்த்தி செய்து சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு ஒப்படைக்கும் நிகழ்வு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த அபேசேன மற்றும் சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.
தனியார் துறையின் ஒத்துழைப்புடன் நிர்மாணிக்கப்பட்ட இந்த யானை வேலிக் கட்டமைப்பு 3.8 கிலோமீட்டர் அளவு வரை நீண்டுள்ளதுடன் 16 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் ஒவ்வொரு கம்பங்களும் முன்னர் பொருத்தப்பட்டுள்ள கொங்கிறீட் தொழில்நுட்பத்துடன் விருத்தி செய்யப்பட்டுள்ளது.
இதில் சில விசேட தன்மைகளைக் காணக் கிடைப்பதுடன், யானை வேலிக் கட்டமைப்புக்கு ஏதேனும் பாதிப்பொன்று அல்லது சேதம் ஏற்படுத்தப்படும் போது அதன் உரிமையாளருக்கு குறுந்தகவல் ஒன்றின் ஊடாக அறிவிக்கப்படும்.
யானை வேலியின் அறிக்கைகளை மேற்பார்வை மற்றும் பகுப்பாய்வு செய்வதற்கு இணையத்தளம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது காணப்படும் யானை வேலிக் கட்டமைப்பை மிகவும் வசதியாக யானைகளினால் தகர்க்க முடியும்.
ஆனால் இந்த யானை வேலிக் கட்டமைப்பிற்கு யானைகள் சேதப்படுத்தும் சந்தர்ப்பம் மிகவும் குறைவாகும்.
இதற்கு முன்னர் நாட்டில் யானை வேலிக் கட்டமைப்பிற்காக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தொழில்நுட்ப உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டதுடன், அதற்காக வருடாந்தம் பாரிய டொலர் பெறுமதியான செலவு செய்யப்பட்டது.
இந்த யானை வேலிக் கட்டமைப்பின் மின் சக்தி பிறப்பாக்கி ஒரு இலட்சம் ரூபாய்க்கும் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கு முன்னர் இவ்வாறான சக்தி பிறப்பாக்கி 5 இலட்சம் ரூபாய்கள் செலவு செய்யப்பட்டு நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
இந்தக் கட்டமைப்பு உள்நாட்டு உபகரண, தொழில்நுட்பம் மற்றும் ஆளணி வளத்துடன் தேசிய மற்றும் சர்வதேச தரத்திற்கு இணங்க தயாரிக்கப்பட்டுள்ளது.