இந்த ஆண்டு நெல் கொள்வனவுக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஹோமாகம, பிடிபன பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பங்கேற்ற ஜனாதிபதி, நெல் கொள்முதல் செய்வதற்காக ஒரு அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட அதிகபட்ச தொகை இதுவெனவும் குறிப்பிட்டார்.
“நெல் கொள்முதல் செய்ய 500 கோடி ரூபா ஒதுக்கியுள்ளது. சமீபத்திய காலங்களில் ஒரு அரசாங்கம் ஒதுக்கிய மிகப்பெரிய தொகை இதுவாகும். நாங்கள் எங்கள் நெல் களஞ்சியசாலைகள் அனைத்தையும் புதுப்பித்து வருகிறோம்.
எங்களது களஞ்சியசாலைகள் 300,000 கொள்ளளவு கொண்டவை, ஆனால் அவற்றில் 300,000 கொள்ளவுக்கான நெல்லை எங்களால் கொள்வனவு செய்ய முடியாது.
ஆனால் அந்தக் களஞ்சியசாலைகளை தனியார் துறை அரிசி சேகரிப்பாளர்களிடம் கொடுக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அதன் பின்னர் அவர்கள் நெல்லை எடுத்து எங்கள் களஞ்சியசாலைகளில் சேமித்து வைப்பார்கள். அரிசியின் அளவு நமக்குத் தெரியும்.
இலங்கையில் அரிசி ஆலைகளை நடத்தும் அனைத்து நெல் சேகரிப்பாளர்கள் மற்றும் வணிகர்களையும் அரசாங்கத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டு, செய்தித்தாளில் ஒரு விளம்பரம் செய்தோம். அரசாங்கத்தில் பதிவு செய்யப்படாத எவரும் இனிமேல் நெல் இருப்புகளைச் சேகரிக்க முடியாது. கொஞ்சம் கூட சேகரிக்க முடியாது.
நீங்கள் பதிவு செய்ததன் பின்னர் எவ்வளவு அரிசியை சேமித்து வைத்திருக்கிறீர்கள் என்பது குறித்து வாராந்திர அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்” என்றார்.