இலங்கை சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் உள்ளடங்கிய துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 2377/39ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட கட்டளைக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில் நேற்று (21) கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டது.
2018ஆம் ஆண்டு பெறப்பட்ட அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய சிங்கப்பூருடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை 2024ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துவதற்கு இந்தக் கட்டளை வெளியிடப்பட்டிருந்ததுடன், பல்வேறு காரணங்களால் நடைமுறைப்படுத்தப்படுவது காலமாதம் அடைந்ததாக குழுவில் ஆஜராகியிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஒப்பந்தத்தில் பொருட்கள் மற்றும் சேவைகள், முதலீட்டுச் செயற்பாடுகள், புலமைசார் சொத்துக்களின் உரிமைகள், தொலைத்தொடர்பு, ஈ-வணிகம் உள்ளிட்ட துறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.