இலங்கை கடற்பரப்பில் எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
இரசாயன திரவங்கள் கடலில் கலந்ததை அடுத்து, இதுவரை 417 கடலாமைகளும் 48 டொல்பின்களும் 8 திமிங்கிலங்களும் உயிரிழந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளதென பிரதி சொலிசிட்டர் நாயகம் மன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கப்பல் தீப்பற்றிய சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்து வரும் விசாரணைகள் குறித்து,
கப்பல் நிறுவனத்தின் உள்நாட்டு நிறுவனம், அதன் அதிகாரிகள் மற்றும் கெப்டன் உள்ளிட்ட நிர்வாகக்குழுவினர் சார்பில் ஆஜராகியுள்ள சட்டத்தரணிகள், பொறுப்பற்ற வகையில் அறிக்கைகளை வெளியிடுவதாக மன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதுடன், அவ்வாறான கருத்துக்களுக்கு தமது திணைக்களம் கண்டனம் தெரிவிப்பதாகவும் பிரதி சொலிசிட்டர் நாயகம் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.