இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கொவிட் 19 வைரஸின் புதிய திரிபுகளை அடையாளம் காண்பதற்காக பயன்படுத்தப்படும் மரபணு பரிசோதனை செயல்முறை குறித்து சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளரும், சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகமுமான வைத்தியர் ஹேமந்த ஹேரத் கருத்து வெளியிட்டார்.
மரபணு பரிசோதனையால்,நாட்டில் கொவிட் 19 வைரஸின் அல்பா, டெல்டா மற்றும் ஒமிக்ரோன் ஆகியவற்றின் புதிய திரிபுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
எதிர்காலத்தில் இந்த விஞ்ஞான முறையானது நோயாளர்களை அடையாளம் காண, புதிய திரிபு வகைகளை கண்டறியவும் தொடர்ந்தும் பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையில் ஒமிக்ரோன் வைரஸால் பாதிக்கப்பட்ட நால்வருக்கும் எவ்வாறு வைரஸ் தொற்று ஏற்பட்டது, அவர்களுடன் தொடர்புடையவர்கள் யார் என்பது தொடர்பில், சுகாதார பிரிவினரால் ஆராயப்பட்டு வருவதாக வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த காலங்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களின்படி, நாட்டை முழுமையாக முடக்காமல், கொவிட் பரவலை கட்டுப்படுத்தவும், மக்களைப் பாதுகாக்கவும் அனைத்து சுகாதார நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதால், மக்கள் சரியான சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி, தேவையான தடுப்பூசிகளைப் பெறுக்கொள்வது சிறப்பானதாக அமையும்.
கொரோனா தடுப்பூசி அட்டையை சட்டபூர்வமாக்குவது தொடர்பில் பணியாற்றி வருகிறோம், மேலும் நாட்டை முடக்காமல் கொவிட் பரவலை கட்டுப்படுத்த முடிந்தால், அது நமது மிகப்பெரிய சாதனையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.