ஈரான் தனது தலைநகரை டெஹ்ரானில் இருந்து மக்ரானுக்கு மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக 2 குழுக்கள் அமைக்கப்பட்டு சாத்தியக்கூறு குறித்த அறிக்கை தயாரிக்கப்பட உள்ள நிலையில் இந்த தலைநகர் மாற்றத்தின் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் முக்கியமான நாடாக ஈரான் உள்ளது. எண்ணெய் வளமிக்க நாடான ஈரானின் மக்கள்தொகை என்பது 8.59 கோடியாகும். இதில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் மட்டும் ஒரு கோடி மக்கள் வசிப்பதாக கூறப்படுகிறது.
தலைநகர் என்பதால் ஏராளமான மக்கள் டெஹ்ரானில் உள்ளனர். இதனால் தற்போது டெஹ்ரானில் மின்தட்டுப்பாடு, தண்ணீர் பிரச்சினை என்பது ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
அதேபோல் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் மக்கள்தொகையால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் தினமும் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றன. இது எல்லாவற்றுக்கும் மேலாக டெஹ்ரானில் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ள இடமாக வார்னிங் செய்யப்பட்டுள்ளது.
இதனால் மக்களின் உயிரை காக்கவும், மக்களுக்கான பிரச்சினைகளையை போக்கவும் ஈரான் தனது தலைநகரை மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது. தலைநகரை மாற்றம் செய்வது தொடர்பாக ஈரான் தீவிரமாக பரிசீலனை நடத்தி வருகிறது. அதன்படி தற்போது ஈரான் தலைநகராக டெஹ்ரான் உள்ளார். டெஹ்ரானுக்கு வரும் புதிய தலைநகராக மக்ரான் நகரை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஈரான் செய்தி தொடர்பாளர் பாத்மி மோகஜிரணி கூறுகையில், “ஈரான் தனது தலைநகரை மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது. ஈரானின் புதிய தலைநகராக தெற்கு கடற்கரை பிராந்தியமான மக்ரான் பகுதியில் அறிவிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. தற்போதைய தலைநகர் டெஹ்ரானில் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் மின்தட்டுப்பாடு, குடிநீர் பிரச்சினை உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் தலைநகரை மாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் சார்பில் தலைநகரை மாற்றம் செய்வதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிக்கின்றன. இந்த தலைநகர் மாற்றம் என்பது உடனடியாக நடக்காமல் இருந்தாலும் கூட அது முக்கிய தேவையாக இருக்கிறது” என்றார்.
ஈரான் தனது புதிய தலைநகரை மக்ரான் பகுதியில் உருவாக்க திட்டமிட்டுள்ள நிலையில் அந்த இடம் ஓமன் வளைகுடா கடற்கரையையொட்டி வரும். அதோடு ஈரானின் தெற்கு கடற்கரை பகுதியில் பலுசிஸ்தான் மாகாணத்தில் இந்த இடம் அமைந்துள்ளது. இங்கு தலைநகரை உருவாக்குவதன் மூலம் கடல்சார் வணிகத்தை மேம்படுத்த முடியும். இது ஈரானின் வர்த்தகத்தை இன்னும் அதிகப்படுத்தும். அதுமட்டுமின்றி அதிகரிக்கும் மக்கள்தொகை உள்ளிட்ட பல பிரச்சனைகளில் இருந்து டெஹ்ரானை மீட்க முடியும் என்று இங்கே கவனிக்கத்தக்கது.
இருப்பினும் ஈரான் தலைநகர் டெஹ்ரானை மாற்றம் செய்ய ஒருதரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தலைநகரை மாற்றம் செய்ய அதிக நிதி செலவு ஏற்படும். அதேபோல் அலுவலகங்கள் மாற்றம் செய்யப்பட வேண்டும். மக்களும் உடனடியாக இடம்பெயருவது சிரமமான காரியமாக இருக்கும் என்று கவலையுடன் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கி உள்ளனர்.
ஈரானை பொறுத்தவரை தலைநகர் டெஹ்ரானை மாற்றம் செய்ய வேண்டும் என்ற முடிவு நீண்டகாலமாக விவாதத்தில் உள்ளது. 1979ம் ஆண்டில் இருந்தே இந்த கோரிக்கை என்பது நிலுவையில் உள்ளது. அதாவது முன்னாள் ஜனாதிபதிகள் முகமது அஹமத் இனிஜாத் மற்றும் ஹசன் ருஹானி உள்ளிட்டவர்களின் பதவிக்காலத்திலும் இந்த தலைநகர் மாற்றம் தொடர்பான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
ஆனாலும் பொருளாதார பிரச்சினையால் புதிய தலைநகரை உருவாக்கும் முயற்சி கைக்கூடவில்லை. இப்போது மீண்டும் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஸ்கியான் காலத்தில் தலைநகரை மாற்றம் செய்ய தீவிரமான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது.