இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழில்துறைக்கு விதிக்கப்பட்டுள்ள வற் மற்றும் சமூகப் பாதுகாப்பு வரிகள் நீக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பேருவளை சீனங்கோட்டை மாணிக்கக் கல் மற்றும் தங்க ஆபரண வர்த்தக சங்கம் (CGJTA) வருடாந்தம் ஏற்பாடு செய்யும் ஜெம் ஸ்ரீ லங்கா 2025 சர்வதேச இரத்தினக்கல் கண்காட்சியைப் பார்வையிட்டதன் பின்னர் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
”இந்தத் தொழிலின் நிகர இலாபத்திற்கு வரி விதிக்கப்படக் கூடாது. எமது நாட்டில் இந்தத் துறையை மழுங்கடிப்பதற்குப் பதிலாக இத்தொழிற் துறையை முன்னேற்றுவதற்குச் சாதகமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
அதுமட்டுமின்றி, திறமையான கைவினைஞர்களை உருவாக்கி, ஏற்றுமதித் தொழிலாக இதனை மேலும் முன்னேற்றுவதற்கு அதிகபட்ச சலுகைகளை வழங்க வேண்டும்.
எனவே, இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிலுக்கு நேர்மறையான குறுகிய கால வேலைத்திட்டமொன்றை வகுத்து அதனைச் செயல்படுத்தி, இத்தொழிலை மேம்படுத்த வேண்டும்.
ஹொங்கொங் மற்றும் தாய்லாந்தை முந்திச் செல்லும் வகையில் எமது நாட்டின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிலை உருவாக்க வேண்டும்”