இஸ்லாம் மதத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் வெலிக்கடை சிறைச்சாலையின் சாதாரண கைதிகள் தடுத்து வைக்கப்படும் அறையில் சிறைவைக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, பதிவு செயல்முறைக்குப் பின்னர், ஞானசார தேரர் சிறையில் அணிய வேண்டிய ஆடையை பரிந்துரைப்பதில் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டம் பின்பற்றப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் திகதி கிருலப்பனை பகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இஸ்லாம் மதத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானதேரர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
குறித்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அவருக்கு 9 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், 1,500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த தண்டனைக்கு எதிராக பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரினால் மேன்முறையீடு செய்யப்பட்டது.
இருப்பினும் குறித்த பிணை மனு நிராகரிக்கப்பட்டதுடன், அத்தகைய பிணை மனுவை பரிசீலிப்பதற்கான விசேட காரணங்களை முன்வைக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.