இந்த நாட்டில் வாழும் மக்களுக்கு தரமான, மற்றும் சிறந்த இலவச சுகாதார சேவைகளை தொடர்ச்சியாக வழங்குவதற்காக, இந்த நாட்டில் உள்ள சுகாதாரசேவையில் உள்ள ஐந்து பிரதான துறைகளை மேம்படுத்துவதற்கு நாங்கள் பாடுபடுவோம் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
ஆயுர்வேத மருத்துவ சபைக்கான உறுப்பினர்களை நியமிப்பதற்கான நியமனக் கடிதங்களில் கையொப்பமிடும் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இதற்கான நியமனக் கடிதங்கள் மஹரகம நாவைன்ன ஆயுர்வேத திணைக்களத்தில் வழங்கப்பட்டன.
இதன்போது அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் காலங்களில் இலங்கையில் ஆரம்ப சுகாதார சேவையை வலுப்படுத்துதல், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சுகாதார அமைப்பை வலுப்படுத்துதல், நாட்டில் மருந்துகளை உற்பத்தி செய்தல் மற்றும் உயர்தர மருந்துகளை வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக வழங்குதல்.
இலங்கை மக்களின் போஷாக்கு மட்டத்தை உயர்த்துவது மற்றும் அபிவிருத்தி செய்தல் ஆகிய 5 முக்கிய துறைகள் ஊடாக சுகாதார சேவையை சிறந்த நிலைக்கு உயர்த்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்நாட்டு மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்வு அமைய, தற்போதுள்ள ஆயுர்வேத துறை மற்றும் மேற்கத்திய, ஆயுர்வேத, சித்தா, யுனானி, ஹோமியோபதி, பாரம்பரிய மற்றும் உள்ளுர் மருத்துவ முறைகளின் அபிவிருத்தி தொடர்பான தற்போதைய பிரச்சினைகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்.
உள்ளூர் மருத்துவ முறையை மேம்படுத்துவது, அந்த மருத்துவ முறையின் உள்ளார்ந்த தனித்தன்மைகளை கண்டறிந்து, அந்த வசதிகளை பயன்படுத்தி சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது அரசின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என்றும் அமைச்சர் கூறினார்