ஓர் இராணுவ அதிகாரியின் வாழ்க்கையில், ஒழுக்கம் என்பது மிக உயர்ந்த நற்பண்பாகும். நம்பிக்கை, தன்னம்பிக்கை மற்றும் குழுவில் உள்ள ஏனையவர்கள் மீதான நம்பிக்கையே ஒரு தலைவரது வெற்றியின் இதயமாகக் கருதப்படுகிறது என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தியத்தலாவ இராணுவ கல்வியியற் கல்லூரியில் இன்று(19) இடம்பெற்ற 96ஆவது விடுகை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இதன்போது “எளிமையான பணிகளில்கூட அதிக கவனத்தைச் செலுத்துதல் மற்றும் கூட்டாகச் செயற்படும் திறனை வளர்த்துக்கொள்ளல் என்பன இராணுவத்தினருக்கான பண்புகளாகும். ஒருவர் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும், மற்றவர்களின் ஒத்துழைப்பின்றி வெற்றிபெற முடியாது” எனக் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நீங்கள் ஒரு தலைவராக உங்கள் பயணத்தைத் தொடங்கும்போது, உங்களுக்கு கீழ் உள்ள வீரர்கள் சாதாரண மனிதர்களே. சூப்பர் வீரர்கள் அல்லர் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறான சாதாரண மக்களிடம் இருந்து சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் செயற்படுவது ஒரு தலைவரின் பொறுப்பாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இடையிடையே இடையூறுகள், தடைகள் ஏற்பட்டாலும் மக்களுக்கான நமது பணியில் கவனம் செலுத்த வேண்டும். பின்னடைவுகள் பயணத்தின் ஒரு பகுதி எனவும் அவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு துணிச்சலான தீர்மானங்களை எடுக்கக் கூடியவராக தலைவர் இருக்க வேண்டும் எனவும், ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.