ஒமிக்ரோன் அச்சுறுத்தல் காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நெதர்லாந்தில் நாளை முதல் முழு ஊரடங்கு விதித்து அந்நாட்டு பிரதமர் மார்க் ரூட்டே அறிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் இருந்து கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் வைரஸ் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. ஐரோப்பியாவில் உள்ள பல நாடுகள் ஒமிக்ரோன் தொற்றால் ஆபத்தான நாடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
நெதர்லாந்த் நாட்டிலும் ஒமிக்ரோன் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையினால் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மக்கள் கூட்டம் சேருவதை தடுக்கும் வகையில் நாளை முதல் முழு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து அத்தியாவசியமற்ற கடைகள், கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் ஜனவரி 14 வரை மூடப்படும் என்றும், பள்ளிகள் குறைந்தபட்சம் ஜனவரி 9 ஆம் திகதி வரை மூடப்படும் என்றும் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே அறிவித்துள்ளார்.