அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கிண்ணத்திற்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியாவும், அடிலெய்டில் ஆஸ்திரேலியாவும் வென்று 1-1 என சமனிலை வகிக்கிறது. பிரிஸ்பேனில் நடந்த 3வது டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி முடிந்தது.
இந்தியா- அவுஸ்திரேலியா இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மெல்பேர்னில் இன்று (26) தொடங்கியது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பெட் கம்மின்ஸ் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.
அவுஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அறிமுக வீரர் சாம் கான்ஸ்டாஸ் உடன் கவாஜா களமிறங்கினர்.
கான்ஸ்டாசுக்கும் கோலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கான்ஸ்டாஸ் நடந்து கொண்டிருக்கும்போது கோலி வேண்டுமென்றே அவரின் தோள்பட்டையில் இடித்தார்.
இந்நிலையில், கான்ஸ்டாஸ் மீது வேண்டுமென்றே மோதிய விவகாரத்தில் விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 20% அபராதம் விதிக்கப்பட்டதுடன் 1 டிமெரிட் புள்ளி வழங்கப்பட்டது.
கிரிக்கெட் மைதானத்தில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் வீரர்களை கண்டிக்கும் வகையில் டிமெரிட் புள்ளி வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.