உயிர் பாதுகாப்புக்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களில் 85 வீதமானவை உரிமம் பெற்றவர்களால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட அனைத்து வகையான துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளையும் அளவு மதிப்பாய்வுக்காக நவம்பர் 21 ஆம் திகதிக்கு முன்னர் அரசாங்கத்திடம் மீள ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது.
இருப்பினும், பின்னர் குறித்த திகதி 20224 டிசம்பர் 31 வரை நீடிக்கப்பட்டது.
எவரேனும் ஒருவர் தொடர்ந்து துப்பாக்கிகளை வைத்திருக்க விரும்பினால், அதன் அவசியத்தை விளக்கி ஒக்டோபர் 30 ஆம் திகதிக்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சிடம் முறையீடுகளை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த மேன்முறையீடுகளை சமர்ப்பித்த உரிமதாரர்களின் துப்பாக்கிகளை ஆய்வு செய்வதற்கும் மறுபரிசீலனை செய்வதற்கும் துப்பாக்கிகளுடன் தொடர்புடைய ஆவணங்களை பாதுகாப்பு அமைச்சகத்திடம் சமர்ப்பிக்குமாறு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
உயிர் பாதுகாப்புக்காக ஒருவருக்கு ஒரு துப்பாக்கியை மாத்திரம் வழங்க பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளதுடன், புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையிலேயே துப்பாக்கிகள் வழங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரையில் கையளிக்கப்படாத மற்றும் கணக்காய்வுக்கு சமர்ப்பிக்கப்படாத அனைத்து உரிமம் பெற்ற துப்பாக்கிகளையும் 2025 ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த திகதிக்கு முன்னர் துப்பாக்கிகளை கையளிக்காத உரிமதாரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்தார்.