தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீள் உருவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்பட்டு 15 இலங்கையர்கள் மீது இந்திய தேசிய புலனாய்வு முகவரகம் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த 15 பேரும் ஆயுதக்கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களின்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் சிலர் இலங்கையின் மாத்தறை- குடாவெல கரையில் இருந்து படகின் மூலம் இந்தியாவுக்கு பயணித்துள்ளனர்.
ஏனைய சிலர், கடந்த மார்ச் 25ஆம் திகதி, பாகிஸ்தானில் இருந்து 300 கிலோ கிராம் ஹெரோய்ன் சகிதம், அராபியக்கடலில் மீன்பிடிப்படகில் வைத்து கைதுசெய்யப்பட்டனர்.இந்த கைது நடவடிக்கையை அடுத்தே தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்று கூறப்படும் ஏ.சுரேஸ்ராஜ் கைதுசெய்யப்பட்டார்.
விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்த கூட்டங்களில் இவர்கள் கலந்து கொண்டதாகவும், இந்தியாவிலும் இலங்கையிலும் அதன் செயல்பாடுகளை முன்னெடுத்துச் சென்றதாகவும், இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகப் போரில் ஈடுபட்டதாகவும் சிலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கேரளாவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் ஒன்றில் எல்.வை. நந்தன, ஜனக தேசப்பிரிய, நமேஸ் சூலக சேனரத், திலங்க மதுஷான் ரணசிங்க, தலலாகே நிசங்க, ஏ. சுரேஸ் ராஜ், எல்.வை நிசாந்த சுத்தா, ஏ.ரமேஸ் உட்பட்டவர்கள் மீதே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.