பங்களாதேஷ் அணி மேற்கிந்திய தீவுக்கு சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி செயிண்ட் கிட்சில் நடைபெறுகிறது. நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பங்களாதேஷ் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 294 ஓட்டங்களை எடுத்தது. தன்ஜித் ஹசன் 60 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் மெஹிதி ஹசன் 74 ஓட்டங்களில் வெளியேறினார். கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய மஹமதுல்லா அரை சதம் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் சார்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 295 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது. அந்த அணியின் ரூதர்போர்ட் அதிரடியாக ஆடினார். அவர் 80 பந்தில் 8 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 113 ஓட்டங்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
அவருக்கு ஷாய் ஹோப் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் 86 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 99 ஓட்டங்களை சேர்த்தது.
இறுதியில், மேற்கிந்திய தீவுகள் அணி 47.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 295 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரில் 1-0 என மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலை வகிக்கிறது.