தொழிற்சங்கங்களை நசுக்குவது அல்லது தொழிற்சங்கங்களை முடக்குவது புதிய அரசாங்கத்தின் கொள்கையல்ல என்றும், தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகளைப் பாதுகாத்து முடிந்தவரை நிறைவேற்றுவதற்கு தமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
தொழில் வல்லுநர்கள் எதிர்நோக்கும் தொழில்சார் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக தொழிற்சங்கங்களின் கருத்துக்கள், ஆலோசனைகள் மற்றும் பங்களிப்பை பெற்றுக்கொள்ளும் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போதே சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA), அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் (ACMOA), மருத்துவ நிபுணர்கள் சங்கம் (AMS), அரசாங்க பல் மருத்துவர்கள் சங்கம் (GDSA), அகில இலங்கை தாதியர் சங்கம், பொது சேவை ஐக்கிய தாதியர் சங்கம், தொழிற்சங்கங்களுடனான தொடர் கலந்துரையாடல் மற்றும் அரசாங்க தாதியர் சங்கம் (GNOA) உட்பட சுகாதாரத் துறையில் உள்ள பல முக்கிய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கடந்த சில நாட்களாக அமைச்சர் மிக நீண்ட தொடர் கலந்துரையாடல்களை நடத்தினார்
மேற்கூறிய தொடர் கலந்துரையாடல்களை மேற்கொண்டு, அமைச்சர் பொது வைத்தியர்களின் கூட்டுச் சபை, அகில இலங்கை குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் சங்கம், அகில இலங்கை சுகாதார பராமரிப்பு பொது வைத்திய நிபுணர்கள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் அண்மையில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.
தொழிற்சங்கப் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட பெரும்பாலான பிரச்சினைகள் மற்றும் முன்மொழிவுகள் மிகவும் நியாயமானவை எனத் தெரிவித்த சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர், அந்தப் பிரச்சினைகளுக்கு முறையான நியாயமான தீர்வுகளை விரைவில் வழங்குவதற்கு தாம் பாடுபடுவேன் என்றார்.
விசேட வைத்தியர் தொடக்கம் மிகக் குறைந்த ஊழியர் வரையான சகல ஊழியர்களும் சேவைக்கு அப்பாற்பட்ட மனிதாபிமானப் பணியை மேற்கொள்வதாகவும், அந்த சிறந்த சேவையின் காரணமாக இலங்கையின் சுகாதாரத் துறையானது சுகாதார அமைச்சின் நம்பிக்கையான இலக்குகளை அடைய முடிந்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை மக்களுக்கு தரமான மற்றும் உகந்த சுகாதார சேவைகளை வழங்கும் தற்போதைய அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு தொழிற்சங்கங்களிடம் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ விசேட கோரிக்கை விடுத்துள்ளார். அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க நிபந்தனையின்றி தேவையான அதிகபட்ச ஆதரவை வழங்குவோம் என தொழிற்சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.