கனடா நாட்டில் பல இலட்சம் வெளிநாட்டு மாணவர்கள் தங்கிப் படித்து வருவது அனைவருக்கும் தெரியும். அவர்களில் சுமார் 7 இலட்சம் பேரின் பெர்மிட் அடுத்தாண்டு உடன் காலாவதியாகும் நிலையில், அவர்கள் கனடா நாட்டை விட்டு வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது.
கனடாவில் கடந்த சில மாதங்களாகவே மிகவும் குழப்பமான சூழல் நிலவுகிறது.
மறுபுறம் அங்கு உள்நாட்டிலேயே பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இதற்கிடையே கனடாவில் வசிக்கும் பல லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் அடுத்தாண்டு அங்கிருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அதாவது, அங்கு வசிக்கும் சுமார் 50 இலட்சம் பேரின் தற்காலிக பெர்மிட் அடுத்தாண்டு இறுதியில் காலாவதியாகிறது. அவர்கள் அனைவரது பெர்மிட்களையும் கனடா புதுப்பிக்காது என்றே தெரிகிறது. இதன் காரணமாக விசா காலாவதியாகும் பலரும் தானாகவே கனடா நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என்றே எதிர்பார்ப்பதாகத் தகவலை குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்தார்.
இத்தனை பேரின் விசாக்கள் ஒரே காலகட்டத்தில் காலவதியாகும் நிலையில், அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைக் கனடா அரசு எப்படி உறுதி செய்யும் என்ற கேள்விகளையும் அந்நாட்டு எதிர்க்கட்சிகள் எழுப்புகின்றன.
இது தொடர்பாக மில்லர் கூறுகையில், “பல லட்சம் பேரின் விசா பெர்மிட்டுகள் காலாவதியாவது உண்மை தான். ஆனால், அதற்காக அவர்கள் அனைவரும் கனடா நாட்டை விட்டு வெளியேறியே தீர வேண்டும் என்ற அவசியமில்லை. சிலர் தங்கள் விசாவை புதுப்பிப்பார்கள். சில மாணவர்கள் வேலை பெர்மிட் கோரி விண்ணப்பிப்பார்கள். தேவையான ஆய்வுக்குப் பிறகு இந்த பெர்மிட்டுகள் நீட்டிக்கப்படும்” என்றார்.
50 லட்சம் பேரின் பெர்மிட்டுகள் காலாவதியாகும் நிலையில், அதில் சுமார் 7.66 லட்சம் பெர்மிட்டுகள் வெளிநாட்டு மாணவர்களுக்குச் சொந்தமானதாகும். அங்கு கடந்த சில மாதங்களாகவே மிகப் பெரியளவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், இதனால் அதிகம் பாதிப்பது அந்த மாணவர்கள் தான். இதே நிலை நீடித்தால் அடுத்தாண்டு இந்த 7 லட்சம் பேரும் கனடாவை விட்டு வெளியேற வேண்டும்.
கடந்த மே 2023 நிலவரப்படி, சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்கள் கனடாவில் உள்ளனர். அவர்களில் சுமார் 3.96 லட்சம் பேர் போஸ்ட் ஒர்க் விசா பெற்றுள்ளனர். இது கடந்த 2018ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிகமாகும். ஆனால், அடுத்தாண்டு சுமார் 7.6 லட்சம் மாணவர்களின் பெர்மிட் காலாவதியாகும் நிலையில், அவர்களில் வெகு சிலருக்கு மட்டுமே பெர்மிட் கிடைக்கும் என்று தெரிகிறது.
அங்கு விலைவாசி அதிகரித்துள்ளதால் கனடா நாட்டவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வுக்கு வெளிநாட்டினரைக் காரணம் என்ற குற்றச்சாட்டு அங்குப் பரவலாக இருக்கும் நிலையில், கனடா அரசு குறைந்தளவில் பெர்மிட்களை தர முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.