நாட்டின் 10ஆவது பாராளுமன்ற சபாநாயகர் கலாநிதி அசோக சப்புமல் ரன்வல, இலங்கை முஸ்லிம்களுக்கு மதிப்பளிக்கும் நோக்கில், இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் பிரதான சபையான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தலைமையகத்திற்கு நேற்று விஜயம் செய்து, நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் சிநேகபூர்வ சந்திப்பில் ஈடுபட்டார்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை சார்பில் அதன் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், உப தலைவர், உப செயலாளர் மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் என பலரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் ஜம்இய்யாவின் வரலாறு மற்றும் இலங்கை முஸ்லிம்களின் நிலை குறித்த அறிமுகத்தை வழங்கினார். மேலும், ஜம்இய்யா செயல்படுத்தி வரும் பல்துறை பணிகள் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இலங்கையில் சகவாழ்வு மற்றும் மக்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்த, ஜம்இய்யா ஒரு அரசியல் சார்பற்ற மத அமைப்பாக செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்தினார்.