மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஈரானை எச்சரிக்கும் வகையில் இப்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசியிருக்கிறார். இஸ்ரேல் மீது இன்னொரு தாக்குதலை ஈரான் நடத்தினால் அந்நாட்டுப் பொருளாதாரமே முடங்கிவிடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இஸ்ரேல் ஏற்கனவே ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா உடன் மோதல் போக்கை கொண்டிருக்கும் நிலையில், இப்போது ஈரான் உடனும் பதற்றம் அதிகரித்தே வருகிறது.
முதலில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொலைக்குப் பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்தது. இதற்கிடையே மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப் போவதாக ஈரான் தொடர்ந்து மிரட்டி வருகிறது.
இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இப்போது ஈரானை எச்சரித்துள்ளார். அதாவது இஸ்ரேல் மீது ஈரான் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் எனக் கூறப்படும் நிலையில், அதுபோல தாக்குதல் நடத்தினால், ஈரானின் மொத்த பொருளாதாரமே முடங்கிவிடும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
சமீபத்தில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் இந்த கருத்துகளைத் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களில் அவர் வெளியிடும் இரண்டாவது வீடியோ இதுவாகும். ஈரான் நாட்டை அந்நாட்டுத் தலைவர் கமெனி தவறாக வழிநடத்துவதாகவும் இதில் நெதன்யாகு குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், “சமீபத்தில் தான் ஈரான் மக்களுக்கு நேரடியாக உரையாற்றினேன். உலகெங்கும் பல லட்சம் மக்கள் அந்த வீடியோவைப் பார்த்தனர். அதன் பிறகு பல ஈரானை நாட்டை சேர்ந்த பலரும் எங்களைத் தொடர்பு கொண்டனர். பல கருத்துகளைச் சொன்னார்கள். இதையடுத்து நான் இரண்டாவது முறையாக ஈரான் மக்களுக்காகப் பேச முடிவு செய்து இருக்கிறேன்” என்று தனது உரையைத் தொடங்கினார்.
கடந்த அக். மாதம் இஸ்ரேல் மீது நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலால் ஈரானுக்கு $2.3 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டதாக நெதன்யாகு தெரிவித்தார். இது தொடர்ந்தால் ஈரானுக்கு மேலும் பல பில்லியன் டாலர் நஷ்டமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். இஸ்ரேல் மீது தாக்குதலால் எப்படி ஈரானுக்கு நஷ்டமாகும் என பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், பின்னர் இது தொடர்பாக இஸ்ரேல் செய்தி தொடர்பாளரே விளக்கமளித்தார்.
அதாவது இஸ்ரேல் மீது பல நூறு ஏவுகணைகள் ஏவப்பட்ட நிலையில், அதற்கான செலவு தான் 2.3 பில்லியன் டாலர் என்றும் அதைத்தான் நெதன்யாகு குறிப்பிட்டதாக விளக்கமளிக்கப்பட்டது.
தொடர்ந்து பேசிய அவர், “நீங்களே பாருங்கள்.. இந்த தாக்குதலால் உங்களுக்கு எவ்வளவு நஷ்டம்.. ஆனால், உங்களால் என்ன சேதத்தை ஏற்படுத்த முடிந்தது.. இந்த தொகையை உங்கள் கல்வி பட்ஜெட்டிலோ அல்லது உள்கட்டமைப்பு பட்ஜெட்டிலோ பயன்படுத்தி இருக்கலாம். ஆனால், அதைச் செய்யாமல் கமேனி மிருகத்தனமாக செயல்பட்டுள்ளார். உலகையே தனது நாட்டிற்கு எதிராகத் திருப்பியிருக்கிறார். உங்கள் பணத்தைச் சொந்த ஈகோவுக்காக செலவிட்டு இருக்கிறார்.
ஈரான் ஒரு ஜனநாயக நாடாக இருந்திருந்தால் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்.. உங்களால் பயமில்லாமல் மனதில் பட்டதைப் பேசியிருக்க முடியும். சிறையில் அடைக்கப்படும் அச்சம் இருக்காது. உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருந்து இருக்கும். எனவே, மக்கள் யோசியுங்கள். அதேநேரம் இன்னொன்றை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஒரு தாக்குதலுக்கே 2.3 பில்லின் இழப்பு என்றால் யோசித்துப் பாருங்கள்.. இன்னொரு தாக்குதலை நடத்தினால் ஈரான் பொருளாதாரமே மொத்தமாக முடங்கும்” என்று கூறியிருக்கிறார்.