இந்த நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி புதிய பயணத்தை மேற்கொள்கிறோம். இதற்கு காத்திருக்க முடியாத பலர் தொடர்ந்து எங்கள் கட்சியை தாக்க ஆரம்பித்துள்ளனர். எங்களிடம் இனவாதம் இல்லை. மதம் இல்லை. உலகம் நமக்கு உதவி செய்கிறது. எமது குரல் வெல்லும் என்பதற்காகவே இவர்கள் அவதூறு பரப்புகின்றனர் என கம்பஹா மாவட்ட வேட்பாளர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்ட தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று (03) பதுளை, ஹாலிஅல உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்ற மக்கள் சந்திப்புகளில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த பேரணிகளுக்கு பெருந்திரளான மக்கள் திரண்டதுடன் மேலும் கருத்து தெரிவிக்கும் போதே அக்கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க, ஐக்கிய ஜனநாயக குரல் ஊழலற்ற புதிய சிந்தனைகளையும் புதிய கொள்கைகளையும் கொண்ட கட்சியாகும்.
பொதுத்தேர்தலில் பல கட்சிகள் போட்டியிட்ட போதிலும், ‘ஐக்கிய ஜனநாயக குரல்’ கட்சி மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், தமது கட்சியின் கொள்கைகள் சரியானவை என்பதாலேயே மக்கள் அதற்கு ஆதரவளிப்பதாகவும், இதற்கு முன்னர் மூன்று தடவைகள் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி போட்டியிட்ட மாவட்டங்களில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றதாகவும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
அவ்வாறே இவ்வருடம் கம்பஹா மாவட்ட ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் தலைவராக தம்மை பாராளுமன்றத்திற்கு அனுப்பும் கம்பஹா மக்களின் ‘குரலாக’ தன்னை உருவாக்கிக்கொண்டதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.