குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக கொழும்பு கிருளைப்பனை பொல்ஹேன்கொடை பிரதேசத்தில் ஆயிரத்து 900 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 528 வீடுகளை கொண்ட கொழம்தொட சரசவி உயன என்ற புதிய தொடர்மாடி வீடமைப்பு தொகுதி நாளை தினம் பயனாளிகளுக்கு கையளிக்கப்படவுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் வீடமைப்பு தொகுதி திறந்து வைக்கப்படவுள்ளது. ஒரு மாடியில் 192 வீடுகள் என்ற அடிப்படையில் இரண்டு தொடர்மாடி கட்டடத்தில் இந்த 528 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இதில் 192 வீடுகளை கொண்ட ஒரு மாடி இந்த கட்டடத்தை நிர்மாணிக்க காணியை வழங்கிய காலிங்க மாவத்தை பகுதியில் வசித்து வந்த குடும்பங்களுக்கு மானிய அடிப்படையில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு வீட்டுக்காக 10 லட்சம் ரூபாய் அறவிடப்படவுள்ளதுடன் இதனை தவணை முறையில் 10 ஆண்டுகளுக்கு செலுத்த முடியும்.
இதற்கான எவ்வித வட்டியும் அறவிடப்பட மாட்டாது என நகர அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
மேலும் 192 வீடுகள் களனி வெளி தொடருந்து பாதையை விரிவுப்படுத்தும் போது அப்புறப்படுத்தப்பட்டவர்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது.