தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு பின்புறம் அமைந்துள்ள தனியார் களஞ்சியசாலையில் மனித பாவனைக்கு பயன்படுத்த முடியாத வகையிலான சீனி கையிருப்பு மீட்கப்பட்டுள்ளது.
சீனி கையிருப்பு தொடர்பில் மாநகர சபையின் சுகாதார பிரிவின் ஊழியர் ஒருவர் மேயர் ஜாலிய ஓபாதவிடம் வழங்கிய தகவலுக்கு அமைய தம்புள்ளை பொலிஸாருடன் இணைந்து குறித்த சீனியின் தொகை மீட்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் கிறிஸ்மஸ் மற்றும் பண்டிகை காலங்களில் நாடு முழுவதிலும் உள்ள நுகர்வோருக்கு இந்த சீனியை விற்பனை செய்யும் நோக்கில் இவை பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்று தம்புள்ளை மேயர் ஜாலிய ஓபாத தெரிவித்தார்.
எந்தவொரு சுகாதாரமான நடைமுறைகளும் இன்றி சீனி நிலத்தில் கொட்டப்பட்டு பின்னர் மீண்டும் பொதி செய்யப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந் நிலையில் இந்த சீனி கையிருப்பு தொடர்பில் தம்புள்ளை பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கும் சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளருக்கும் எதிராக முறைப்பாடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.