பங்களாதேஷ் மாணவர்கள் போராட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது.
ஜனாதிபதி பதவி விலகக் கோரிய இந்த போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடவும் முயற்சித்துள்ளனர்.
எனினும் அந்த முயற்சியை பாதுகாப்பு படையினர் முறியடித்துள்ளனர்.
பங்களாதேஷ் அரசு கொண்டு வந்த வேலை ஒதுக்கீட்டு முறைக்கு எதிராக கடந்த ஜூலை மாதம் தொடங்கிய மாணவர் போராட்டம், அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பதவியை இழந்ததுடன் முடிவுக்கு வந்தது.
போராட்டக்காரர்கள் பிரதமரின் இல்லத்தை முற்றுகையிடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு நாட்டை விட்டு வெளியேறிய ஹசீனா, அன்றிலிருந்து இந்தியாவிலேயே தங்கியுள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில் பாராளுமன்றத்தை கூட முற்றுகையிட்ட மாணவர் போராட்டக்காரர்கள் நாட்டில் புதிய ஆட்சியை கொண்டுவர நடவடிக்கை எடுத்தனர்.
மாணவர் தலைவர்களின் பங்களிப்புடன் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசும் நியமிக்கப்பட்டது.
அதன் பின்னர், நாட்டில் அன்றாட நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பிய போதிலும், நாட்டில் மீண்டும் பாரிய போராட்டங்கள் தொடர ஆரம்பித்துள்ளன.
2023 ஆம் ஆண்டு முதல் பதவியில் இருக்கும் தற்போதைய ஜனாதிபதி முகமது ஷஹாப்தீனை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பன போன்ற ஐந்து விடயங்களை அரசாங்கம் நிறைவேற்றக் கோரி மாணவர்கள் மீண்டும் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.
அதன்படி, ஜனாதிபதி மாளிகை அருகே போராட்டக்காரர்கள் திரண்டு வந்து முற்றுகையிட தயாராகினர்.
எவ்வாறாயினும், பாதுகாப்புப் படையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்கியதன் காரணமாக இந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சுப்பு என்று அழைக்கப்படும் தற்போதைய ஜனாதிபதி ஷஹாப்தீன் பங்களாதேஷின் 16வது ஜனாதிபதி ஆவார்.
அவர் பதவியேற்ற 2023 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 2014, 2018 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் ஷேக் ஹசீனா அரசாங்கம் நடத்திய தேர்தல்கள் சட்டவிரோதமானது என்று மாணவர் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனால், தற்போதைய ஜனாதிபதிக்கு பதவியில் நீடிக்க எந்த உரிமையும் இல்லை என அந்தக் குழு வலியுறுத்துகிறது.