ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியாவின் புதுடில்லிக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (04) இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இது தொடர்பான அழைப்பை விடுப்பார் என உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்வார் என்றும், அங்கு அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் உறவுகள் தொடர்பில் கலந்துரையாடுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றதன் பின்னர், இலங்கைக்கு விஜயம் செய்யும் முதல் உயர்மட்ட பிரமுகர் என இந்திய வெளிவிவகார அமைச்சரை அறிமுகப்படுத்த முடியும்.
இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இன்று இலங்கைக்கு வருகை தரும் கலாநிதி சுப்ரமணியம் ஜயசங்கர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரை சந்திக்க உள்ளார்.
அத்துடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழுவினர் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை வெளிவிவகார அமைச்சில் சந்தித்து கலந்துரையாடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சர் ஜெயசங்கருடன், இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் குழுவும் இந்த விஜயத்தில் இணையவுள்ளது.