இன்று (21) இரவு 10 மணி முதல் நாளை (22) காலை 6 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
பொது பாதுகாப்புச் சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி இலக்கம் 2402/23 இன்று 21.09.2024 இரவு 10.00 மணி தொடக்கம் 22.09.09.2018 காலை 6.00 மணி வரை அமுலில் இருக்கும் என காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் மிகவும் அமைதியான சூழல் நிலவுகின்ற போதிலும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் பொதுமக்கள் தமது வீடுகளிலேயே நேரத்தைச் செலவிடுமாறும் கோரப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில், தேர்தல் கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் தொடர்பில் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்படும் அடையாள அட்டைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள் ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரங்களாக பயன்படுத்தப்படலாம்.
வெளிநாட்டிற்குச் செல்லும் மற்றும் வெளிநாட்டிலிருந்து விமான நிலையத்திலிருந்து வெளியேறும் நோக்கத்துடன் விமான நிலையத்திற்குச் செல்லும் அனைத்து நபர்களும் தங்கள் விமான டிக்கெட் அல்லது ஆதார ஆவணங்களை ஊரடங்குச் சட்ட அனுமதிப் பத்திரமாகப் பயன்படுத்தலாம்.
கூடுதலாக, அத்தியாவசிய சேவைகளை நடத்தும் நிறுவனங்களின் தொடர்புடைய ஊழியர்களுக்கு, அவர்களின் உத்தியோகபூர்வ அடையாள அட்டை அல்லது பொருத்தமான ஆவணம் பயன்படுத்தப்படலாம், மேலும் அந்த ஆவணம் மற்றும் தொடர்புடைய நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்த தேவையான ஆவணங்களை காவல்துறையில் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
இந்த காலப்பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனை மீறும் எந்தவொரு செயலையும் செய்ய வேண்டாம் என அனைத்து பொதுமக்களிடமும் பொலிசார் வலியுறுத்துகிறது.