இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச இறையாண்மை பிணைமுறிப்பத்திரம் வைத்திருப்பவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நாளை நடைபெறவுள்ளது.
அந்த கலந்துரையாடலின் பின்னர் இலங்கையின் வங்குரோத்துநிலை முற்றாக முடிவுக்கு வந்து, மீண்டும் அனைத்து நாடுகளின் ஆதரவையும் எமது நாடு பெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
தம்மிடம் ஏதேனும் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டிருந்தால் அந்தப் பொறுப்பு, வெற்றிகரமாகப் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்ற செய்தியை, செப்டெம்பர் 21ஆம் திகதிக்கு முன்னர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி கூறினார்.
மாத்தறை உயன்வத்தை விளையாட்டரங்கில் இன்று (18) இடம்பெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
‘இயலும் ஸ்ரீலங்கா’ என்று கூறி அன்று பொருளாதார சவாலுக்கு முகம் கொடுத்து அதில் வெற்றி பெற்றதாகக் கூறிய ஜனாதிபதி, இன்று ‘இயலும் ஸ்ரீலங்கா’ என்பது நாட்டை அபிவிருத்தி செய்வதாகும் என்றும், நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லக்கூடிய தலைவரைத் தெரிவு செய்வது மக்களின் பொறுப்பாகும் எனவும் வலியுறுத்தினார்.
சஜித்தும், அநுரவும் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் இருப்பதாகக் கூறினால், ஏன் அன்று நாட்டை பொறுப்பேற்கவில்லை என கேள்வி எழுப்பிய ஜனாதிபதி, தன்னிடம் சிறந்த அணி இருப்பதாக இன்று சஜித் கூறினாலும், அந்த அணிதான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியவில்லை என பகிரங்கமாக கூறியதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
எங்களின் தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவடைகிறது. செப்டெம்பர் 21ஆம் திகதி இந்நாட்டு மக்கள் தமது எதிர்காலம் குறித்துத் தீர்மானிக்க வேண்டும். நான் ஒரு அரசியல்வாதியாக வாழ்க்கையை எதிர்கொண்டேன். குடிமக்களாகிய நீங்கள் அரசியல்வாதிகளை நம்பினீர்கள். கடந்த இரண்டு வருடங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு புதிய அனுபவம் கிடைத்தது. நீங்கள் நம்பிய தலைவர்கள் இந்நாட்டின் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கத் தவறி, தங்கள் பொறுப்புகளில் இருந்து ஓடிவிட்டனர்.
அரசியல்வாதிகளாக நாம் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மகிழ்ச்சியும் சோகமும் உண்டு. எமக்கு நல்லதும் கூறுகிறார்கள், கெட்டதும் கூறுகிறார்கள். நாம் பிரபலமாகினோம். அதேபோன்று, நம் பெயர் மறந்தும்விடும். அரசியல் செயல்பாட்டின் மூலம் இலாபம் அல்லது இழப்பும் ஏற்படும், அதேபோன்று முடிவுகள் எடுக்க வேண்டியேற்படும்.
மக்கள் என்னை நிராகரித்த போதும், என்னால் மக்களை நிராகரிக்க முடியாது என்று முடிவு செய்தேன். நாட்டின் தலைவர் என்ற முறையில் மக்களை நிராகரிக்காமல் மக்களுக்கான சவாலை ஏற்றுக்கொண்டேன். என்னிடம் ஒப்படைக்கப்பட்ட கப்பலில் ஓட்டைகள் இருந்தன. டைட்டானிக் கப்பல் போல் மூழ்கியிருக்கலாம். கப்பலுக்குள் தண்ணீர் புகுந்தது. கேப்டன் இல்லை. ஆனால் நாங்கள் கப்பலை எடுத்துக்கொண்டு மற்றவர்களுடன் சேர்ந்து பயணத்தைத் தொடங்கினோம்.
கடனை அடைக்க முடியாத நாட்டை நான் பொறுப்பேற்றேன். வங்குரோத்தான நாடு, அந்நியச் செலாவணி இல்லாத நாடு. எங்கள் பிணைமுறிப் பத்திரதாரர்கள் எங்களை நிராகரித்தனர். ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் அந்தச் செயற்பாடுகளை நிறைவுசெய்து எமது கடன் நிலைபேற்றுத் தன்மையையும் வங்குரோத்து நிலையையும் நீக்குவதன் மூலம் அபிவிருத்தியடைவதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. அதற்காக சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, வங்குரோத்து நிலையை முடிவுக்குக் கொண்டுவந்து முன்னேறுவதற்கான வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்துள்ளது.
மேலும் எங்களுக்கு கடன் வழங்கிய நாடுகளும் உள்ளன. அந்த 18 நாடுகளுடன் ஒரு ஒப்பந்தமும், சீனாவுடன் தனி ஒப்பந்தமும் செய்து கொள்ளப்பட்டது.
எங்களின் கடன் நிலைபேற்றுத் தன்மையை அங்கீகரிப்பதற்காக ஒரு புதிய அமைப்பை உருவாக்குவதற்கும், நாங்கள் வங்குரோத்தானவர்கள் அல்ல என்பதை ஏற்றுக்கொண்டு, நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் ஒரு உடன்படிக்கைக்கு வர முடிந்தது.
எஞ்சியிருப்பது சர்வதேச இறையாண்மை பிணைமுறிப் பத்திரதாரர்களுடனான பேச்சுவார்த்தை.
அதன்படி நாளை அவர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் தீர்மானம் எட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்த பின்னர் இலங்கையின் வங்குரோத்து நிலை ஒழிக்கப்பட்டு அந்த நாடுகளிடம் இருந்து உதவிகளைப் பெற்றுக் கொள்ளவுள்ளோம். என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை, அந்த வேலைத் திட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளோம் என்பதை செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், என்னால் அறிவிக்க முடிந்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்தத் திட்டத்தில், நாங்கள் கடினமான, பிரபலமற்ற முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் மாற்று வழியில்லை. மக்கள் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் அந்த பிரச்சினைகளைத் தீர்க்க நான் உழைத்தேன். இன்று ரூபாயின் மதிப்பு வலுப்பெற்று பொருட்களின் விலைகள் படிப்படியாகக் குறைந்து மக்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது. மேலும், 2025 இல் வாழ்க்கைச் சுமை பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர எதிர்பார்க்கிறேன்.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதாக இன்று சஜித்தும் அனுரவும் கூறுகின்றனர். அந்த ஒப்பந்தங்களை இரத்து செய்து நாட்டை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டுமா என்று கேட்கிறேன்.
சஜித்துக்கும் அனுரவுக்கும் எந்த திட்டமும் இல்லை. அவர்களுக்கு வேண்டியது அதிகாரம் மட்டுமே. சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அது இலகுவான விடயமல்ல. அப்போது இலங்கை மீதான நம்பிக்கை இழக்கப்பட்டு மீண்டும் வரிசை யுகத்தை சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் எம்முடன் பயணித்தால் ரூபாயை பலப்படுத்தி வாழ்க்கைச் சுமையை இலகுவாக்கி நாட்டை அபிவிருத்தி செய்ய சந்தர்ப்பம் கிடைக்கும். எனவே தெரிந்த வீதியில் செல்வதா அல்லது தெரியாத வீதியில் சென்று தொலைந்து போவதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
சஜித்துக்கும் அநுரவுக்கும் தீர்வுகள் இருந்தால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஏன் நாட்டைப் பொறுப்பேற்கவில்லை என நான் கேட்கின்றேன்.
நாட்டின் பொறுப்பை ஏற்க முடியாமல் வெளியேறியவர்களிடம் இந்த நாடு மீண்டும் ஒப்படைக்கப்பட வேண்டுமா? எனவே நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லக்கூடிய தலைவரை தெரிவு செய்யும் பொறுப்பு மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த ஜனாதிபதி தேர்தலில் கிரிக்கெட் அணி போன்ற அணிகள் தெரிவு செய்யப்படாது. பாராளுமன்ற தேர்தல் மூலம் ஆட்சியமைக்கும் குழு தேர்ந்தெடுக்கப்படுகிறது.
சிலர் தன்னிடம் சிறந்த அணி இருப்பதாகக் கூறுகிறார்கள். அப்படியானால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் அந்த அணி ஏன் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவில்லை என நான் கேட்கின்றேன். நாட்டைப் பொறுப்பேற்க வேண்டாம் என்று கூறியது அதே குழுதான் என்பதை இங்கு நினைவு கூர்கிறேன். எனவே இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தமது எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டும்.
இளைஞர்களின் எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டும். அந்தப் புதிய பயணத்தை மேற்கொள்ள மக்கள் ஆணையை வேண்டுகிறேன். நாளை தனியார் பிணைமுறிதாரர்களுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டு 22ஆம் திகதி முதல் புதிய பயணத்தை மேற்கொள்ளத் தயாராகவுள்ளோம்.
வாழ்க்கைச் சுமையைக் குறைத்து, வேலை வாய்ப்பை அளித்து, புதிய பொருளாதாரத்தை உருவாக்கி, அந்நியச் செலாவணியை பிச்சை கேட்காமல் நமது நாட்டைப் பெருமைமிக்க நாடாக முன்னெடுத்துச் செல்ல, செப்டம்பர் 21ஆம் தேதி கேஸ் சிலிண்டருக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.