இந்தியா – கேரளாவில் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதித்த 2வது நபர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியா – கேரளாவில் மலப்புரத்தில் 23 வயது மாணவர் அண்மையில் உயிரிழந்த நிலையில் அவருக்கு நிபா வைரஸ் உறுதியானது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கேரளாவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த இளைஞருக்கு மூளைக்காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது உறுதியானதையடுத்து மருத்துவ அதிகாரி நடத்திய விசாரணையில் நிபா வைரஸ் பாதிப்பு சந்தேகிக்கப்பட்டது.
குறித்த இளைஞர் 4 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளார். இளைஞருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் அனைவரின் தகவல்களும் சேகரிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட 5 பேருக்கு லேசான அறிகுறிகள் தோன்றியதை அடுத்து, மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் நிபா வைரசால் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, வைரஸ் பரவாமல் தடுக்க மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடிகள் மற்றும் திரையரங்குகள் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. பொதுக்கூட்டங்களும் நடத்த தடை விதிக்கப்பட்டது. பொதுமக்கள் முகமூடி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது