பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் மொயின் கான். இவருடைய மகன் அசாம் கான். இவர் டி20 கிரிக்கெட்டில் ஒரு அதிரடி வீரர்.
ஆனால் உடற்தகுதி என்று எடுத்துக் கொண்டால், குண்டாக காணப்படுவார். இந்த உடலை வைத்துக் கொண்டு எப்படி கீப்பிங் செய்வார் என்று ரசிகர்கள் ஏளனம் செய்வார்கள். அதற்கு ஏற்றபடி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின்போது விக்கெட் கீப்பராக சோபிக்கவில்லை. பேட்டிங்கில் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஒரு போட்டியில் கூட களம் இறக்கப்படவில்லை.
இந்த நிலையில் தன்னுடைய மகன் அசாம் கானை மன உளைச்சலுக்கு ஆளாக்கியவர் ரமீஸ் ராஜா என மொயின் கான் விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக மொயின் கான் கூறியதாவது;
“.. 2022 (2021) உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணிக்கு அசாம் கான் தேர்வு பெற்றார். ஆனால் ரமீஸ் ராஜா அவரை நீக்கினார். அந்த நேரத்தில் தலைமை தேர்வாளர் தவறு செய்திருந்தால், அவர் நீக்கப்பட்டிருக்க வேண்டும்.
அவர்களுக்கு தைரியம் இல்லை. இதன்முடிவு அவர்கள் ஒரு இளம் வீரரை மன உளைச்சலுக்கு ஆளாக்கினர். அதேபோல் இந்த உலகக் கோப்பையிலும் அவர் எப்படி விளையாடினார் என்பதை பார்த்து இருப்பீர்கள்.
நான் இந்த உலகக் கிண்ண போட்டிகள், அதற்கு முன் நடைபெற்ற பயிற்சி போட்டிகள் அனைத்து போட்டிகளையும் பார்த்தேன். விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங்கில் அசாம் நம்பர் ஒன் தேர்வாக இருப்பது போல் தோன்றியது. ஒரு போட்டிக்குப்பின் திடீரென ஒட்டுமொத்த வியூகமும் மாற்றப்பட்டது. ஒரேயொரு பந்தை சந்தித்து ஆட்டமிழந்த பின், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
அணி நிர்வாகம் மற்றும் கேப்டன் மீது மட்டும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் நான் சொல்லமாட்டேன். அசாம் கான் மீதும் தவறு உள்ளது. அவர் தனுக்குத்தானே உடல் அளவிலும், மனதளவிலும் வலிமை பெற வேண்டியது அவசியம். மற்ற வீரர்களை போன்று உடற்தகுதியில் கவனம் செலுத்த வேண்டும். தற்போது அவர் தனது பிட்னஸில் முன்னேற்றம் கண்டு வருவதை நான் உணர்கிறேன். ..”