அரச மற்றும் தனியார் சுகாதாரத்தை உள்ளடக்கிய விரிவான சுகாதார சேவைச் சட்டம் கொண்டுவரப்படும் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்திருந்தார்.
‘ஆரோக்கியமான எதிர்காலத்துக்காக வைத்தியர்கள்’ என்ற தொனிப்பொருளில் நேற்று (12) பிற்பகல் பத்தரமுல்லை வொர்டஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்ற வைத்தியர்களிள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன உரையாற்றுகையில்;
”நமது நாட்டில் சுகாதாரம் என்பது இலவசக் கல்வியுடன் இணைக்கப்பட்டுள்ளது. சுதந்திர இலங்கையின் கடந்த 76 வருடங்களில், இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதாரம் என்பன மிக முக்கியமான காரணிகளாகும். 20ஆம் நூற்றாண்டில் இந்நாட்டில் நிகழ்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு 1945ஆம் ஆண்டு மறைந்த கல்வி அமைச்சர் சி. டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரா அவர்கள் இலவசக் கல்விச் சட்டத்தை அரச மந்திரி சபையில் முன்வைத்தார். அதன் மூலம் பாடசாலைக்கு செல்லாத பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்ல ஆரம்பித்தனர். பின்னர் அவர்கள் பல்கலைக்கழகங்களும் சென்றனர். அவர்கள் இந்த நாட்டின் சமூக அடித்தளத்தை நிரந்தரமாக மாற்றினார்கள்.
இலவசக் கல்வியின் பலனைப் பெற்ற சட்டத்தரணிகள், வைத்தியர்கள், கணக்காளர்கள், பொறியியலாளர்கள் மற்றும் ஏனைய தொழில் வல்லுநர்கள் இலங்கையின் சமூகக் கட்டமைப்பை மாற்றினர். கல்வி முறையின் வளர்ச்சியுடன், இந்த நாட்டின் சுகாதார கட்டமைப்பு பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. 1948 இல் நாம் சுதந்திரம் பெற்ற போது இலங்கையில் பணிபுரிந்த அரச வைத்தியர்களின் எண்ணிக்கை 500இற்கும் குறைவாகவே இருந்தது. இன்று நமது சுகாதாரத் துறையில் சுமார் 25,000 மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அன்று சுமார் 750 தாதியர்கள் இருந்தனர். ஆனால் இன்று சுமார் 45,000 தாதியர்கள் உள்ளனர். முழு சுகாதார சேவையிலும் 150,000 இற்கும் அதிகமானோர் பணிபுரிகின்றனர். இதனுடன், மருத்துவமனைகளின் எண்ணிக்கை உட்பட சுகாதாரத் துறை தொடர்பான பௌதீக வளங்களும் மேம்பட்டுள்ளன. அதன்படி, சுதந்திரத்தின் போது இந்நாட்டின் ஆயுட்காலம் 42 வருடங்களாக இருந்த போதிலும், தற்போது அது 80 வருடங்களாக அதிகரித்துள்ளது.
இன்று, சுகாதாரத் துறையில் மறுசீரமைப்புகளுக்கான நேரம் வந்துவிட்டது. நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்தல், சிறந்த சேவையை வழங்குதல், சுகாதார சேவை நிபுணர்களை பாதுகாப்பதுடன் அவர்களை ஊக்குவிக்கவும் வேண்டியுள்ளது. அவர்களுக்குத் தேவையான ஒதுக்கீடுகள் மற்றும் பின்புலத்தை உருவாக்கிக் கொடுப்பதே இப்போது சவாலாக உள்ளது. கடந்த இரண்டு வருடங்களில், சுகாதார நிபுணர்களின் சிறந்த ஆதரவின் காரணமாக, இலங்கையில் சுகாதார சேவையில் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முடிந்தது.
மேலும், அனைத்து சுகாதார சேவை நிபுணர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஒரு அரசாங்கம் என்ற வகையில், நாங்கள் செயற்பட்டு வருகிறோம். குறிப்பாக வைத்தியர்களை, விசேட சேவைப் பிரிவாக அங்கீகரிக்குமாறு விடுக்கும் கோரிக்கை மற்றும் அனைத்துத் தொழில்சார் பிரச்சினைகளையும் தீர்ப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பதையும் கூற வேண்டும்.” என்று தெரிவித்தார் .