இந்த ஆண்டு மனித உரிமைகள் தினத்தின் கருப்பொருள் சமத்துவம் – சமத்துவமின்மைகளைக் குறைத்தல், மனித உரிமைகளை முன்னேற்றுதல் என்பதாகும்.
1948 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் டிசம்பர் 10 ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
அனைத்து பிரஜைகளுக்கும் பிறப்பு முதல் உள்ள உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் மனித உரிமைகள் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு தனி மனிதனும் தான் வாழ்வதற்கான உரிமையை பெறுவதும் மற்ற மனிதரை வாழ விடும் நெறிமுறையை உணர்த்துவதுமே இந்த பிரகடனத்தின் முக்கிய நோக்கமாகும்.
அனைவரும் சுதந்திரமானவர்களாகவும் உரிமையிலும் கண்ணியத்திலும் ஒருவருக்கொருவர் சமமானவர்கள் என்பதை இப் பிரகடனம் வலியுறுத்துகின்றது.
1955 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பிரகடனத்தை இலங்கை ஏற்றுக்கொணடது.
அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாசாரம் முதலிய அனைத்து விடயங்களிலும் மக்களின் உரிமைகளை பாதுகாப்பது அனைத்து அரசாங்கங்கங்களினதும் பொறுப்பு என 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற மனித உரிமை மாநாட்டின் போது தெரிவிக்கப்பட்டது.
இனம், நிறம், பாலினம், மொழி, மதம், அரசியல், நாடு, சமுதாய தோன்றல், சொத்து, பிறப்பு அல்லது சமூக உயர்வு போன்ற எந்த வித வேறுபாடுகளும் இன்றி ஒவ்வொரு மனிதனும் வாழ்வதன் அவசியத்தை இந்நாள் உணர்த்துகின்றது என்றால் அது மிகையாது.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார்.
அரசாங்கம் என்ற ரீதியில் இலங்கை வாழ் மக்களின் மனித உரிமையை பாதுகாக்க வேண்டும் என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
தாம் ஆட்சிக்கு வந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் மனித உரிமையை பாதுகாத்து, ஒழுக்கமான முறையில் இலங்கை மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்க கட்டுப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
சுபீட்சத்தின் நோக்கு அரச கொள்கையின் ஊடாக, அனைத்து மக்களதும் மனித உரிமைகளை பாதுகாத்து நாட்டினதும் குடிமக்களினதும் நற்பேறுக்காக அரசாங்கம் என்ற ரீதியில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் பிரதமர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
COVID – 19 தொற்று நிலைமைக்கு மத்தியிலும் மனித சமூகத்தின் உரிமைகள் மீறப்படாத வகையில் அடிப்படை உரிமைகள் போன்றே தேவைகளுக்காகவும் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
உலகளாவிய ரீதியில் எதிர்நோக்கியுள்ள கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு போன்றே, நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்காக உரிமைகளை வெற்றி கொண்டு, தேவையான கடமைகளை நிறைவேற்றுவதற்கு இம்முறை மனித உரிமைகள் தினத்தில் கைகோர்க்குமாறு அழைப்பு விடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.