ஆளில்லா ஸ்டார்லைனர் விண்கலம் இன்று காலை பூமிக்குத் திரும்பியது. அந்த விண்கலத்தில் பூமிக்குத் திரும்ப வேண்டியிருந்த விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே உள்ளனர்.
இரு விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏற்பட்டதால், அதில் வீரர்கள் மீண்டும் பூமிக்குத் திரும்புவது மிகவும் ஆபத்தானதாகக் கருதப்பட்டது.
இதனால், அவர்களின் எட்டு நாட்கள் பயணம் எட்டு மாதங்களாக நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்டார்லைனர் பூமிக்குத் திரும்புவதற்கு 6 மணிநேரம் எடுத்தது.
தொழில்நுட்ப சிக்கல்கள் இருந்ததால் இந்த விண்கலத்தின் மூலம் அவர்களை பூமிக்குக் கொண்டு வருவது பாதுகாப்பானதா என்ற சந்தேகம் எழுந்தது. பின்னர் அந்த இரண்டு விண்வெளி வீரர்களும் இன்னும் சில மாதங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திலே தங்கியிருந்து ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்புவார்கள் என்று நாசா அறிவித்தது.