வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பொதுமக்களுக்கான பிறப்பு, திருமணப்பதிவு மற்றும் இறப்புச் சான்றிதழ்களுக்கான நிகழ்நிலை சான்றுறுதிப்படுத்தல் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இலங்கை குடிமக்கள் தங்கள் பிறப்பு, திருமணபதிவு மற்றும் இறப்புச் சான்றிதழ்களின் சான்றுறுதிப்பாட்டிற்காக தூதரக விவகாரங்கள் பிரிவின் நிகழ்நிலை இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பிக்க முடியும்.
சான்றுறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ்கள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பதாரருக்கு அனுப்பப்படுவதுடன், விண்ணப்பிப்பது அல்லது சான்றுறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களின் சேகரிப்பு ஆகியவற்றை நேரில் சமுகமளித்து மேற்கொள்ளும் தேவையை நீக்குகிறது.
பொதுமக்களுக்கான ஆவண அங்கீகார சேவைகளின் வினைத்திறன் மற்றும் பயானுறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்கு இலத்திரனியல் மயமாக்குவதன் முக்கியத்துவத்தை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தினார்.
பிறப்பு, திருமணப்பதிவு மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நிகழ்நிலை சான்றுறுதிப்படுத்தல் நடைமுறைகள் பின்வருமாறு:
– வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடவும் மற்றும் வழங்கப்பட்ட இணையநுழைவாயில் மூலம் நிகழ்நிலை விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்: https://mfa.gov.lk/online-consular-services/
– விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதும், விண்ணப்பதாரர்கள் தேவையான பணம் செலுத்துவதற்கான இணைப்பைப் பெறுவார்கள். சான்றிதழ் உருவாக்கம் மற்றும் சான்றுறுதிப்படுத்தலுக்கான கட்டணத்தை இந்த இணைப்பின் மூலம் செலுத்த வேண்டும்.
– கொடுப்பனவிற்கான பரிவர்த்தனையை முடித்த பிறகு, சான்றுறுதிப்படுத்தப்பட்ட ஆவணம் (வாடிக்கையாளர் நகல்) விண்ணப்பதாரர் வழங்கிய முகவரிக்கு மின்னஞ்சலில் அனுப்பப்படும். வாடிக்கையாளர் நகல் தொடர்புடைய வெளிநாட்டு பணியகங்களின் தேவைக்கேற்ப சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இது தொடர்பிலான சகல விசாரணைகளுக்கும், அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவை 011-2338812 அல்லது 0112-446302 என்ற தொலைபேசி இலக்கம் மற்றும் authentication.consular@mfa.gov.lk எனும் மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.