‘இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மும்முனைப் போட்டி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இம்முறை, நாட்டை காப்பாற்றிய தலைவருக்கும், தன் தலையைக் காத்துக் கொண்ட தலைவர்களுக்கும் இடையேதான் இம்முறை போட்டியிருக்கிறது என முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜா-எல நகரில் நேற்று(30) இடம்பெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அன்று மக்கள் அனைத்திற்கும் அல்லாடிக் கொண்டிருந்தனர். நல்ல வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருந்தவர்கள் கூட இவ்வாறு அல்லாடிக் கொண்டிருந்தனர். அதனால் எதிர்வரும் 21ஆம் திகதி நடக்கும் தேர்தல் நாட்டைக் காப்பற்றிய தலைவருக்கும், தங்களைக் காப்பாற்றிக் கொண்ட தலைவர்களுக்கும் இடையிலான போட்டி என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த இடத்தில் இருந்தாலும் இம்முறை ரணில் விக்ரமசிங்கவிற்கே வாக்களிக்க வேண்டும். ஜே.வி.பி வெற்றிக் கனவில் இருக்கின்றனர்.
ஆனால் அநுர குமார அமைச்சரவையில் யார் இருப்பார்கள்? நிதியமைச்சர் யார்? கல்வி அமைச்சர் யார்? என்பதை சிந்தித்துப் பாருங்கள். அன்று இருந்த வரிசை யுகத்திற்கு தீர்வு கண்டு மூன்று மாதங்களில் மக்களின் இயல்வு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவந்தார்.
அன்று ஒரு சுற்றுலாப் பயணி வரவில்லை. விமான நிலையம் வொறிச்சோடியிருந்தது. இன்று விமான நிலையத்தைப் பாருங்கள். சுற்றுலாப் பயணிகள் நிரம்பி வழிகின்றனர். இத்தனையும் நடந்தும் ஏன் மீண்டும் பரீட்சித்துப் பார்க்க வேண்டும். ஒரு முறை பரீட்சித்துப் பார்த்து, இரவு விழுந்த குழியில் பகலில் விழக்கூடாது. உங்களின் பிள்ளைகளுக்காக சிந்தித்து செயல்படுமாறு கூப்பிட்டுக் கேட்டுக்கொள்கிறேன்.
இன்று அனுபவம் உள்ள தலைவர் ஒருவர் தேவைப்படுகிறார். நீங்கள் சரியான தீர்மானத்தை எடுக்காவிட்டால் நீங்கள் மிகவும் துன்பப்படவேண்டியிருக்கும். ஆறு மாதங்களில் மீண்டும் வரிசைகளுக்குச் செல்ல நேரிடும்.” என்று முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.