மக்களுக்கு பாரிய பிரச்சினையாக உள்ள உழைக்கும் போது செலுத்தும் வரியை மீளாய்வு செய்வதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அது தொடர்பில் கலந்துரையாடி மக்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
எஹலியகொட புதிய சந்தைக்கு அருகில் இன்று (28) நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் பேரணியில் எஹலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
இந்த மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், இந்நாட்டு மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை அரசாங்கம் நன்கு உணர்ந்துள்ளது.. நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால் நாம் அனைவரும் வாழ்வதற்கு ஒரு நாடு எஞ்சியிருக்காது எனவும் வலியுறுத்தினார்.
வரியையும் குறைத்து, மக்களின் வாழ்க்கைச் சுமையையும் குறைப்பதாக சாத்தியமில்லாத வாக்குறுதிகளை சஜித் பிரேமதாசவும், அனுரகுமார திஸாநாயக்கவும் மக்களுக்கு வழங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அவர்கள் கூறும் பாதையில் சென்றால் எரிவாயு, எரிபொருள் மற்றும் மருந்து இல்லாத பாதைக்கே மக்கள் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
‘‘முன்பு எஹலியகொடவில் கூட்டம் நடத்தும் போது எமது மேடையில் பவித்ரா வன்னியாரச்சியை விமர்சித்து உரை நிகழ்த்தப்படும். பவித்ரா வன்னியாரச்சியின் கூட்டங்களில் அவர் என்னை விமர்சிப்பார். ஆனால் இன்று நாம் அனைவரும் நாட்டை மீட்பதற்காக கட்சி பேதமின்றி ஒன்றிணைந்துள்ளோம்.
நீங்கள் மருந்து, கேஸ், எரிபொருள் இன்றி கஷ்டப்பட்ட போது நாம் ஒன்றிணைந்து நாட்டை மீட்டோம். அநுரவும் எனது முன்னாள் பிரதித் தலைவர் சஜித்தும் மாத்திரம் எம்முடன் இணையவில்லை. நாம் திருடுவதற்காக இணைந்துள்ளதாக அவர்கள் விமர்சிக்கின்றனர். கட்சியை நேசிப்பது போலவே நாட்டையும் நேசித்ததாலே நாம் ஒன்றிணைந்துள்ளோம். எமக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம் இது தான்.
2024 ஆம் ஆண்டில் அரச ஊழியர்களுக்கு 5000 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டது. பின்னர் அது 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படுகிறது. அடிப்படைச் சம்பளம் உயர்த்தப்படுகிறது. எம்மிடம் உள்ள பணம் அதிகரிப்பதோடு நிவாரணம் வழங்க ஆரம்பித்தோம்.
370 ரூபாவாக இருந்த டொலரின் பெறுமதி 300 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. இது 260 ரூபாவாக வீழ்ச்சியடையும் போது மேலும் அதிகமாக சலுகைகள் வழங்கலாம்.. மக்கள் படும் வேதனை எமக்குத் தெரியும். அதனை போக்கவே நடவடிக்கை எடுத்து வருகிறோம். உழைக்கும் போதான வரியை திருத்த ஜஎம்எப் உடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. எமது யோசனையும் ஜஎம்எப் யோசனையும் ஆராயப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும்.
மக்களின் வாழ்க்கைச் செலவுக்கு முதலில் நிவாரணம் வழங்க வேண்டும். வரிகளின் ஊடாகவும் சலுகை வழங்கப்படும். அடுத்த இளைஞர் யுவதிகளுக்காக தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும். விசேட கூட்டத்தின் ஊடாக எனது கொள்கைப் பிரகடனம் நாளை வெளியிடப்படும். அநுரவும் சஜித்தும் வரியை குறைப்பதாக கூறுகின்றனர். வரியை குறைத்தால் அரசின் வருமானம் குறையும். எவ்வாறு அதனை ஈடுசெய்ய முடியும். வருமானம் குறைந்து, செலவு அதிகரித்தால் என்ன நடக்கும். 15 வீதம் வருமானம் குறைந்து செலவு 15 வீதத்தினால் அதிகரித்தால் அதனை ஈடுசெய்வதற்கான பணத்தை எப்படி பெற முடியும்.
அந்த நிலையில் பணம் அச்சிட நேரிடும். பணம் அச்சிட்டால் ஜஎம்எப் ஒப்பந்தம் ரத்தாகும். இதில் வேறு மாற்று வழி இருந்தால் எதிரணி சொல்லட்டும். வருமானத்தை குறைத்து வரியை அதிகரித்து எவ்வாறு ரூபாவின் பெறுமதியை பாதுகாக்க முடியும். அந்த பாதையில் சென்றால் கேஸ், டீசல், பெற்றோல் அற்ற நிலை தான் உருவாகும். அந்த நிலைக்குச் செல்ல விரும்புகிறீர்களா? மேடைகளில் எம்மை திட்டித்தீர்ப்பதால் பயனில்லை. உங்களை வாழ வைப்பதற்கே நாம் அனைத்தையும் செய்கிறோம்.
அநுரவிற்கோ சஜித்திற்கோ அதனை செய்ய முடியாது. உங்கள் எதிர்காலம் குறித்து சிந்தித்து கேஸ் சிலிண்டருக்கு வாக்களியுங்கள்” என ஜனாதிபதி தெரிவித்தார்.