எனக்கு கிடைக்கின்ற மக்கள் வரத்தை என் உயிரை போல் பாதுகாத்து, அதன் கௌரவத்தை பாதுகாத்து இன, மத, குல, கட்சி பேதமின்றி நாட்டை அபிவிருத்தி அடையச் செய்வேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்திக்கும் எனக்கும் திருடர்களுடன் எந்த டீளும் இல்லாத காரணத்தினால், நாட்டின் வளங்களையும் சொத்துக்களையும் பணத்தையும் திருடிய திருடர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம். எனக்கும் எனது குழுவுக்கும் அதனை எந்த தயக்கமும் இன்றி நிறைவேற்ற முடியும்.
நான் ஜனாதிபதி பதவிக்கும், பிரதமர் பதவிக்கும், எனது சுய கௌரவத்தையும் மக்களின் பாரம்பரியத்தையும் காட்டிக் கொடுக்கவில்லை. மக்களின் ஆணையுடன் நாட்டுக்கான எனது பொறுப்பை ஏற்றுக்கொள்வேன் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தற்போதைய ஜனாதிபதி பதில் ஜனாதிபதியாக பதவியேற்ற உடன் திருடர்களை பாதுகாக்கின்ற வாயிற் காவலாளியாகவும், பொலிஸ்மா அதிபராகவும் செயற்படுகின்றார். அவ்வாறான ஜனாதிபதி பதவி தனக்குத் தேவையில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த 23 ஆவது மக்கள் வெற்றிப் பேரணி அம்பாறை பஸ் நிலையத்திற்கு அருகில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொரோனா தொற்று பரவல் மற்றும் நாட்டை வங்கரோத்து அடையச் செய்தமை ஆகிய மூன்று காரணங்களாலும் நாட்டின் விவசாயிகள் பாரிய சிக்கல்களை எதிர் கொண்டார்கள். இயற்கை உர ஊழல் மற்றும் நானோ ஊழல் என்பனவற்றின் காரணமாக விவசாயிகளின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உயர்தரத்திலான 50 கிலோ கிராம் உர மூடை ஒன்றை 5000 ரூபாவிற்கு வழங்குவதோடு, நியாயமான விலையில் இரசாயன மருந்துகளையும் திரவ உரங்களையும் முறையாக கமநல சேவை மத்திய நிலையங்கள் ஊடாக விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தெரிவித்தார்.
நெல்லுக்கான நிர்ணய விலையை வழங்குவதோடு நாடு, சம்பா, கீரி சம்பா, கெகுலு போன்ற அரிசிகளுக்கு விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை. அத்தோடு நாட்டில் செயல்படுகின்ற அரிசி மாபியாவை ஒழிப்பதற்கும் நடவடிக்கை எடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அழுத்தங்களையும், பிரச்சினைகளையும் எதிர்கொண்டுள்ள விவசாயிகளின் விவசாயக் கடன்களை இரத்து செய்வோம் என்று கூறுகின்ற போது அதனை எவ்வாறு மேற்கொள்வது என்று நயவஞ்சகர்கள் கேட்கின்றார்கள். பிணை இன்றி எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் கோடிக்கணக்கில் வங்கிகளில் கடனை பெற்றுக் கொண்டு அதனை மீளச் செலுத்தாதவர்கள் அம்பாறை மாவட்டத்திலும் இருக்கின்றார்கள். அவர்களுக்கு அரசியல்வாதிகளின் உதவிகள் கிடைப்பதால் அந்தக் கடனை இரத்துச் செய்ய முடியுமாக இருக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
அந்த சக்தி வாய்ந்தவர்களுக்கு கிடைத்த அதிகாரம் இந்த மண்ணிலே இருக்கின்ற சாதாரண மக்களுக்கு கிடைக்காவிட்டாலும் அந்த அதிகாரம் செப்டம்பர் 21 ஆம் திகதி மக்களுக்கு கிடைக்கும் நாள் உதயமாகும். அந்த அதிகாரத்தை பயன்படுத்தி விவசாயிகளின் விவசாய கடனை இரத்து செய்கின்ற யுகத்தை உருவாக்குவோம்.
கோடீஸ்வரர்கள் ஆட்சி செய்கின்ற காலமா மக்கள் ஆட்சி செய்கின்ற காலமா என்பதை தீர்மானிக்கும் உரிமை மக்களிடமே காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது சுட்டிக்காட்டினார்.