வெள்ளவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது STF அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்ற பிரபல போதைப்பொருள் வியாபாரி ஷிரான் பாசிக் அலியின் மகன் நதின் பாசிக் அலி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
இவர் நேற்று (27) இரவு டுபாயில் இருந்து இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நதின் பாசிக் அலி, போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் நீதிமன்றினால் வெளிநாடு செல்ல தடை உத்தரவும் பெறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த தடை நீதிமன்றத்தினால் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இரண்டு மாதங்களுக்கு முன்னர், வெள்ளவத்தை பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவொன்று அவர் பயணித்த காரை நிறுத்த முற்பட்ட போது, அந்த அதிகாரிகளை விபத்துக்குள்ளாக்கியுள்ளார்.
பின்னர் வெள்ளவத்தை பொலிசார் நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்து மீண்டும் சந்தேக நபருக்கு எதிராக வெளிநாட்டு பயணத்தடை விதித்ததுடன், நதின் பாசிக் அலி என்பவர் வெள்ளவத்தை பொலிஸாரால் விசாரணைக்காக தேடப்பட்டு வரும் சந்தேகநபராக பெயரிடப்பட்டிருந்தார்.
‘நதின் பாசிக் அலி’யின் தந்தையான ‘ஷிரான் பாசிக் அலி’ இந்நாட்டின் பிரபல போதைப்பொருள் வியாபாரியாக அறியப்படுகிறார்.
சந்தேக நபரை வெள்ளவத்தை பொலிஸ் அதிகாரிகள் குழுவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.