சிலருக்கு பாராளுமன்ற உறுப்புரிமை கிடைக்கப்பெற்றதன் பின்னர் தாய் தந்தையர் மற்றும் அவர்களின் பிறப்பு என்பன மறந்து போய் விடுகின்றது. சிலர் மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டு நல்லடக்கமா எரிப்பதா என்கின்ற பிரச்சினையின் போது கோட்டாபய ராஜபக்சவுக்கு கையை உயர்த்தினார்கள். முஸ்லிம் மக்களுடைய கலாச்சார மற்றும் மார்க்க உரிமையை பாதுகாப்பதற்காக தாம் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியினர் செயற்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மதுபானசாலை அனுமதி பத்திரங்களுக்காகவும், வைன் ஸ்டோர்ஸ்களுக்காகவும் மக்கள் கொடுத்த வரங்களை விற்பனை செய்திருக்கின்றார்கள். ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ஒரு பக்கம் இருந்து இன்னொரு பக்கம் தாவுகின்ற தவளை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். தற்பொழுது காணப்படுகின்ற சட்டங்களை மேலும் வலுப்படுத்தி தமக்கான ஆதாயத்திற்காக, கட்சி மாறுகின்ற அரசியலை நிறுத்துவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் 21 ஆவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று(27) மாலை அம்பாறை பொத்துவிலில் பெருந்திரளான மக்கள் கூட்டத்தோடு வெற்றிகரமாக இடம் பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
எமது நாடு சுதந்திர நாடு என்றாலும் மக்களுக்கான பொருளாதார சுதந்திரம் இல்லாமல் போயிருக்கின்றது. எமது நாடு இன மத ரீதியாக பிரிந்து காணப்பட்டாலும் நாட்டு மக்கள் இன, மத, வகுப்பு வாதங்கள் இன்றி 21 ஆம் திகதியாகும் போது ஒன்றாக இணைந்து, தேசிய இனக்கத்தோடும், நல்லிணக்கத்தோடும், நட்புறவோடும் ஒன்றுபட்ட தாய் நாட்டைக் கட்டி எழுப்புவார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இதற்கு முன்னர் தேசியக் மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவும் தவளை அரசியல் குறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இணைப்புச்செய்தி
கட்சி தாவும் எம்பிக்களின் பதவியை இல்லாதொழிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும்