உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்கத் திணைக்களம், மதுவரித் திணைக்களம் ஆகிய மூன்று பிரதான அரச வருமான மூலங்களில், பாரிய நிலுவைத் தொகை இருப்பதாக வௌியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவையாகும் என மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்தார்.
இந்த மூன்று நிறுவனங்களிலும் நிலுவையில் உள்ள வரித் தொகை 90 பில்லியன் ரூபாய் மாத்திரமே என சுட்டிக்காட்டிய அவர், உலகில் எந்தவொரு நாட்டின் மொத்த வரி வருமானத்தில் 3% – 5% வரையானது நிலுவையில் உள்ள வரி என்றும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
மேலும், இந்த மூன்று நிறுவனங்களும் 2023 ஆம் ஆண்டில் வரலாற்றில் மிக அதிக வருமானமாக, 3 டிரில்லியன் ரூபாயைத் தாண்டி வருமானம் பெற்றுள்ளதுடன், 25 ஆண்டுகளுக்குப் பிறகு, முதன்மைக் கணக்கில் மேலதிகத்தை உருவாக்க முடிந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
இதன்போது, மதுவரித் திணைக்களம் தொடர்பில் அவதானம் செலுத்தினால் 2023 இல் 179 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான இலக்கு 232 பில்லியன் ரூபாயாகும். 2023 ஆகஸ்ட் 22 இல், நாங்கள் 106.5 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டினோம், 2024 ஆகஸ்ட்டில், நாங்கள் 132.7 மில்லியன் ரூபாய் வருமானத்தைப் பெற்றுள்ளோம். அதன்படி, இந்த ஆண்டு 24.6% வளர்ச்சியைக் காட்டுகிறது.
மேலும், அனுமதிப் பத்திரம் வழங்குவதன் மூலம் மதுவரித் திணைக்களத்துக்கு வருமானம் கிடைக்கிறது. மாநகர சபை எல்லையில் 15 மில்லியன் ரூபாய், நகர சபையில் 12.5 மில்லியன் ரூபாய், பிரதேச சபை எல்லையில் 10 மில்லியன் ரூபாய் அறவிடப்படுகிறது. ஒரு உற்பத்தித் தொழிற்சாலைக்கான அனுமதிப் பத்திரம் 25 மில்லியன் ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.
இவ்வருடம் ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை எமது திணைக்களம் 132.4 பில்லியன் ரூபாயை ஈட்டியுள்ளது. 2023 ஆம் ஆண்டில், எங்கள் நிறுவனத்தின் நிலுவைத் தொகை 1040 மில்லியன் ரூபாயாகும். ஆனால் இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள் அதிலிருந்து 609 மில்லியன் ரூபாயை வசூலிக்க முடிந்தது.
ஏனைய அனைத்து வரி நிலுவைகளும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டவை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார்.