நாட்டை பாதுகாத்த சிவில் பாதுகாப்பு துறை உத்தியோகத்தர்களை தற்போதைய அரசாங்கம் வீட்டுக்கு அனுப்புவதற்கு முயற்சித்த போது இந்தத் துறை குறித்து நாங்கள் உயரிய குரலில் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி, இந்தத் துறையை பாதுகாத்தது ஐக்கிய மக்கள் சக்தியே. சிவில் பாதுகாப்புத்துறை ஊடாக பல அர்ப்பணிப்புகளை மேற்கொண்டு அதிகாரிகள் அனைவருக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கான 24 வீத சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் போது, அவர்களுக்கும் இந்த சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்ற போது அவை சிவில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் கிடைக்கும். சுய விருப்பின் பேரில் ஓய்வு பெற விரும்புகின்ற சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு ஒரு தொகை பணத்தை வழங்கவும் ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்கும்.
இதற்கு மேலதிகமாக பதவி உயர்வு முறைமைகள், கூட்டுக் கொடுப்பனவுகள், ஊனமுற்ற சிவில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கான நிவாரணங்கள் என்பனவும் வழங்கப்படும். அநியாயமான முறையில் சேவையிலிருந்து நீக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு மீண்டும் அந்த தொழிலைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் பதின்மூன்றாவது மக்கள் வெற்றிப் பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று(24) தெஹியத்தகண்டிய பொதுச்சந்தைச் வளாகத்திற்கு அருகில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் என பெரும் திரளானோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.