இன்று நாட்டின் தலைமைத்துவத்தை கோரும் சஜித் பிரேமதாச, அன்று நெருக்கடியான காலத்தில் நாட்டையும் மக்களையும் பொறுப்பேற்க முன்வரவில்லை என்றும், மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் போது அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த எவரும் நாட்டின் தலைமைக்குப் பொருத்தமற்றவர்கள் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தெரிவித்தார்.
தனியொரு உறுப்பினராக பாராளுமன்றத்தில் செயற்பட்ட தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைக் கட்டியெழுப்பும் சவாலை ஏற்றுக்கொண்டதாகவும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றி முழு நாட்டினதும் வெற்றியாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தனது ஆதரவை வழங்குவதாக அறிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் விக்டர் ஸ்டான்லி நேற்று (21) கொழும்பு பிளவர் வீதியிலுள்ள அரசியல் அலுவலகத்தில் ஜனாதிபதியை சந்தித்த போதே இதனைக் குறிப்பிட்டார்.
அதன்போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ் மாவட்ட கிறிஸ்தவ மத விவகாரங்கள் இணைப்பாளராக விக்டர் ஸ்டான்லி நியமிக்கப்பட்டார்.
மேலும் இங்கு கருத்து தெரிவித்த விக்டர் ஸ்டான்லி கூறியதாவது:
‘’வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கு ஒன்றிணைந்துள்ளனர். அத்துடன், ஜனாதிபதியின் வெற்றியை மாபெரும் வெற்றியாக மாற்றுவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்.
கடந்த காலத்தில் எமது நாட்டில் இருந்த பிரச்சினைகள் அனைவரும் அறிந்ததே. நாட்டு மக்கள் வரிசைகள் இருந்தனர். இன்று நாடு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. கடந்த காலத்தை மக்கள் மறந்துவிடக் கூடாது. இன்று நாட்டின் தலைமையை கோரும் சஜித் பிரேமதாச நெருக்கடியான நேரத்தில் நாடு மற்றும் மக்களைப் பொறுப்பேற்க முன்வரவில்லை. ஆனால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டை கட்டியெழுப்பும் சவாலை ஏற்றுக்கொண்டார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வந்தமை நாட்டிற்கு சிறப்பாக அமைந்தது. புதிய நம்பிக்கையையும் அளித்தது. அன்று நமது நாட்டு மக்கள் வீதிகளில் இறந்து கிடக்கும் யுகம் உருவாகியிருந்தது. குழந்தைகளுக்கு பால்மா பாக்கெட் வாங்கக்கூட முடியாமல் மக்கள் தவித்தனர். இவர்கள் படும் துயரத்தைப் பார்த்து எதிர்க்கட்சி தலைவர்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தனர். மக்கள் கஷ்டப்படும் போது மௌனமாக பார்த்துக் கொண்டிருந்த எவரும் நாட்டின் தலைமைத்துவத்திற்கு தகுதியானவர்கள் அல்ல.
இப்போது அவர்களில் ஒருவர் நாட்டைத் தனக்குத் தருமாறு கேட்கிறார். இன்னொருவர் அவர் வெற்றிபெறுவார் என்கிறார். அன்று இவர்கள் எங்கே இருந்தார்கள்? ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டைப் பொறுப்பேற்று அன்று நாடு இருந்த நிலையில் இருந்து இன்று இந்த நிலைமைக்கு மாற்றியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க இந்நாட்டின் பொறுப்பை ஏற்றதும், வீழ்ச்சியடைந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று அறிவித்தார். அதை இன்று அவர் செயலில் நிரூபித்துள்ளார்.
எனவே, நாம் ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகித்தாலும் நாட்டின் எதிர்காலம் மற்றும் மக்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட தீர்மானித்தோம். வடக்கு கிழக்கு மக்கள் உட்பட இந்நாட்டின் அனைத்து மக்களினதும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே.
எனவே, இந்த நாட்டை மீண்டும் வரிசை யுகத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று இந்நாட்டின் இளைஞர் சமூகத்திடம் கேட்டுக்கொள்கிறேன். பெட்ரோல் ஒரு லிட்டரை 117 ரூபாய்க்கு வழங்கிய நல்லாட்சி அரசாங்கம் அரசியல் அலையில் சிக்கி மாறியது. இறுதியாக கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்குக் கொண்டு வந்து முழு நாடும் அழித்தது.
தற்போது “கோட்டா-2” உருவாகி வருகிறது. சிலர் வரிகளை முற்றிலுமாக இரத்து செய்வதாக கூறுகின்றனர். மற்றவர்கள் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் மாற்றப்படும் என்று கூறுகிறார்கள். இவை அனைத்தும் சாத்தியமற்றது என்றுதான் கூற வேண்டும். எனவே, மீண்டும் அதே குழிக்குள் விழ வேண்டாம் என்று மக்களை கேட்டுக் கொள்கிறேன்.
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க அவர்கள் வெற்றிபெறாவிட்டால், இந்த நாடு மீண்டும் வரிசை யுகத்திற்குச் செல்லும் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, விசித்திரக் கதைகளிலோ அல்லது அலைகளிலோ ஏமாந்து இந்த நாட்டின் எதிர்காலத்தை இருண்ட யுகத்திற்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வீழ்ந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்பிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது நம்பிக்கை வைத்து, அவருடன் இணைந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.