தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் கட்சி மாறும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அவ்வாறு கட்சி மாறுவோரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இல்லாதொழிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிரிகள் தேசிய சக்திக்கு எதிராக சேறு பூசி வருகின்றனர் என்றும் அவர் கூறினார். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நாட்டின் ஜனாதிபதியாக தோழர் அநுர குமார திஸாநாயக்க நிச்சயமாக தெரிவு செய்யப்படுவார் என மக்கள் ஏற்கனவே தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கம்பளையில் நேற்று(21) இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய கூறியதாவது:
“அநுரவுக்கு ஒரு கோடி மக்களை சேர்க்கும் இந்தப் பயணத்தில் இணைந்த உங்கள் அனைவருக்கும் நன்றி. எமது தோழர் அநுரவை இந்த நாட்டின் தலைவராக்குவதற்கு நாடு தீர்மானம் எடுத்துள்ளது, அவரை ஜனாதிபதியாக்க உங்கள் வாக்குகளை வழங்குங்கள்.
நாங்கள் வேறு ஒரு ஜனாதிபதியை நியமிக்க முயற்சிக்கவில்லை. இந்த நாட்டை கட்டியெழுப்பக்கூடிய தலைவரை நியமிக்க முயற்சிக்கின்றோம். இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாமல் பலர் இந்த நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும்.
தவளை போல் குதிக்கும் இந்த அரசியலுக்கு முடிவு கட்டினால் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும். தனிப்பட்ட காரணங்களுக்காக நாட்டைக் காட்டிக்கொடுக்கும் நபர்களைக் கொண்டு இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. உங்களுக்கு நன்றாக நினைவிருக்கிறது. புதிய அரசியலமைப்பை முன்வைத்துள்ளோம். அதில், கட்சி மாறினால், எம்.பி., பதவி பறிபோகும் வகையில், கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன.
39 வேட்பாளர்களில் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் தோழர் அநுர. அவரை முன்னுக்கு கொண்டு வந்தவர் நீங்கள். செப்டெம்பர் 21ஆம் திகதி தோழர் அநுர வெற்றி பெற்றால், அன்று இந்த நாடு வெற்றி பெறும். அன்று நீ வெல்வாய்”.