அரசாங்க உரக் கம்பனி (State Fertilizer Company) கடந்த வருடத்தில் என்றுமில்லாதவாறு அதிக இலாபம் ஈட்டியுள்ளதாக கம்பனிகளின் தலைவர் பேராசிரியர் ஜகத் பெரேரா தெரிவித்தார்.
இதுவரை இரண்டாகக் காணப்பட்ட அரசாங்கத்திற்குச் சொந்தமான உரக் கம்பனிகளான இலங்கை உரக் கம்பனி மற்றும் வர்த்தக உரக் கம்பனி ஆகியவை 2024ஆம் ஆண்டிலிருந்து அரசாங்க உரக் கம்பனி (State Fertilizer Company) எனும் பெயரில் ஒன்றிணைக்கப்பட்டதுடன், அக்கம்பனி கடந்த வருடத்தில் 433 மில்லியன் ஈட்டப்பட்டுள்ளதாகக் கம்பனிகளின் தலைவர் பேராசிரியர் ஜகத் பெரேரா தெரிவித்தார்.
அரசாங்க உரக் கம்பனியின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் இம்முறை சிறுபோகம், மற்றும் எதிர்வரும் பெரும் போகம் என்பவற்றில் உர விநியோகம் தொடர்பாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
அதன்படி இலங்கை உரக் கம்பனி 141 மில்லியன் கொழும்பு வர்த்தக உரக் கம்பனி 292 மில்லியன் இலாபம் ஈட்டியுள்ளன.
அவ்வாறே இக்கம்பனிகள் இரண்டையும் ஒன்றிணைக்கும் போது அதன் ஊழியர்கள் 272 பேர் தாமாகவே முன்வந்து ஓய்வுபெற்றதுடன் அவ்வூழியர்களுக்காக வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை இதுவரை எமது நாட்டின் வரலாற்றில் வழங்கப்பட்ட பாரிய இழப்பீட்டுத் தொகையாகும். அதற்காக அரச உரக் கம்பனியின் நிதியிலிருந்து 840 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.
இதன்போது கருத்துத் தெரிவித்த விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர நாட்டில் பொருளாதார சிக்கல் நிலை காணப்பட்டாலும், அரசுக்கு சொந்தமான உரக் கம்பனியினால் அதிக இலாபம் ஈட்டப்பட்டுள்ளமை பாராட்டத்தக்கது என்றும் குறிப்பிட்டார்.
விசேடமாக அரசாங்க உரக் கம்பனி இவ்வாறு பாரிய நிதி இலாபத்தை நெல், தேயிலை, தென்னை, இறப்பர் மற்றும் கறுவா ஆகிய உற்பத்திகளுக்கு உரமானியம் வழங்கியதனூடாகப் பெறப்பட்டது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.