இஸ்ரேல் ஹமாஸ் போர் காரணமாக மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இது எங்கு பிராந்திய போராக வெடிக்குமோ என்று உலக நாடுகளும் அஞ்சி வருகின்றன. இதற்கிடையே இரு தரப்பிற்கும் இடையே சமரசம் செய்யும் பைடன் அரசின் நடவடிக்கைக்கு இப்போது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது முக்கியமான நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்குப் பகுதியில் பல மாதங்களாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடந்தாண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் படை தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.
ஹமாஸை முழுமையாக ஒழிக்கும் வரை இந்த போர் தொடரும் என்றே இஸ்ரேல் இத்தனை காலம் சொல்லி வந்தது. ஆனால், உலக நாடுகள் இது பிராந்திய போராக வெடிக்காமல் இருக்க மோதலை முடிவுக்குக் கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் எடுத்தன.
இருப்பினும், இத்தனை காலம் அதற்குப் பெரிதாகப் பலன் கிடைக்கவில்லை. ஆனால், இப்போது அங்கே நிலைமை மெல்ல மாற தொடங்கி இருக்கிறது. அதாவது காசாவில் போர் நிறுத்தம் மற்றும் பணயக் கைதிகளை விடுவிப்பது குறித்த பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒத்துக் கொண்டு இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். மேலும், ஹமாஸும் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னதாக நேற்றைய தினம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் சுமார் இரண்டரை மணிநேரம் பிளின்கன் தனியாக சந்தித்துப் பேசினார். அதன் பின்னரே பிளிங்கன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அடுத்தகட்டமாக இன்று பிளிங்கன் எகிப்துக்குப் பயணம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கே ஹமாஸ் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என கூறப்படுகிறது.
பிளிங்கன் மேலும் கூறுகையில், “பிரதமர் நெதன்யாகுவுடன் இன்று நடந்த கலந்துரையாடல் மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்தது. இரு தரப்பிற்கும் இடையே இருக்கும் வேறுபாடுகளில் ஒரு சமரசத்தைக் கொண்டு வரும் திட்டத்தை இஸ்ரேல் ஏற்கிறது. இதை நெதன்யாகு உறுதி செய்துள்ளார். அடுத்தகட்டமாக இதற்கு ஹமாஸ் படையும் ஓகே சொல்ல வேண்டும். அதுதான் முக்கியம்” என்றார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்கா, எகிப்து மற்றும் கத்தார் நாடுகள் பல மாதங்களாக ஒரு முயன்று வருகின்றன. இருப்பினும், அதில் சமரசம் ஏற்படவில்லை. பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முடங்கியே வருகிறது. இந்த நேரத்தில் பிளிங்கனின் இந்த அறிவிப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
காசா பகுதியில் தான் இப்போது பாலஸ்தீன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அந்த காசா பகுதியில் இருக்கும் இரு முக்கிய காரிடர்கள் இனி தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என இஸ்ரேல் கூறுகிறது. இருப்பினும், இதற்கு ஹமாஸ் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து எதாவது உடன்பாடு ஏற்படுமா என்பது பற்றி பிளிங்கன் எதுவும் கூறவில்லை. இதனால் இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பதில் சஸ்பென்ஸ் நீட்டித்தே வருகிறது.