புதிய ‘குடிவரவு’ சட்டமூலத்தை பரிசீலித்த குழு அது தொடர்பில் அதிகாரிகளிடம் விடயங்களை கேட்டறிந்தது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் 2024 ஜூன் 20 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டமூலத்தை 2017 இல் வரைபு செய்ய ஆரம்பிக்கப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிடிய தெரிவித்தார்.
புதிய ‘குடிவரவு’ சட்டமூலத்தை பரிசீலிப்பதற்கு வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறவேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் முன்னிலையில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அழைக்கப்பட்டிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், குடிவருவோர் மற்றும் குடியகல்வோர் சட்டம் மற்றும் 1971 இன் 53 ஆம் இலக்கமுடைய வெளிநாட்டுக் கடவுச்சீட்டு (ஒழுங்குபடுத்தல்) மற்றும் வெளியேறல் அனுமதிப் பத்திரச் சட்டம் என்பன தற்போதைய சமூக, தொழில்நுட்ப நிலைமைகளுக்குப் பொருந்தும் வகையில் திருத்தம் செய்யப்பட்டு இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்தச் சட்டமூலம் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டு, அது தொடர்பான தீர்மானம் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் உரிய திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நாட்டின் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களில் உள்ள குறைபாடுகளை சரிசெய்வதற்கான ஏற்பாடுகளை இந்த சட்டமூலம் கொண்டுள்ளதாகவும் இங்கு புலப்பட்டது.
விசேடமாக இந்நாட்டில் மனிதக் கடத்தல் (Human Smuggling) தொடர்பில் முதன்முறையாக இந்தப் புதிய சட்டமூலம் ஊடாகத் தேவையான சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்தார்.
அத்துடன், புதிய தொழில்நுட்பத்துடன் திணைக்களம் முன்னோக்கிச் செல்வதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் மற்றும் நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருபோருக்குப் பொருந்தக்கூடிய ஏற்பாடுகள் உள்ளிட்ட புதிய சட்டங்களை இந்தப் புதிய சட்டமூலம் கொண்டுள்ளது.
பலரது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கருத்திற்கொண்டு இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டதாக இலுக்பிட்டிய மேலும் குறிப்பிட்டார். நீண்ட நாட்களாக தாமதமான இந்த சட்டமூலம் காலத்துக்கேற்ற முக்கியமானது சட்டமூலம் என்றும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.