எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஸ்ரீலங்கா குடியரசு முன்னணியும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக கடந்த 10ம் திகதி நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அவ்வாறு இருக்க எம்மை தொடர்பு கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள் சிலர், குறித்த செய்தியில் உண்மைத்தன்மை இல்லை என்பது போன்று கருத்துக்களை தெரிவித்திருந்தனர். உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரைக்கும் இந்தச் செய்தி வேண்டாமே எனவும் கோரியிருந்தனர். அது ஏன்? ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கவா என்றும் எம்மில் ஊகங்கள் இருந்தன.
ஏனெனில், கடந்த 6ம் திகதி யாருக்கு ஆதரவு என கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;
“ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது குறித்து எங்கள் கட்சியின் உச்ச சபை விரிவான விவாதத்தை நடத்தியது.
அதன்படி, 14ஆம் திகதி காலை 10 மணிக்கு இறுதி தீர்மானம் எடுக்க முடிவு செய்துள்ளோம். அத்துடன், எமது கட்சி இன்னும் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இருப்பதால், அவர்கள் கூட்டணிக் கூட்டங்களில் பங்கேற்பார்கள்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி (SJB) எங்களது ஆதரவை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதுடன் தற்போதைய ஜனாதிபதியும் எங்களின் ஆதரவை கோரி கடிதம் அனுப்பியுள்ளார்.
நாம் கூறுவது தற்போதைய பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டும். எங்களால் ரிவேர்ஸ் கியரில் திரும்பிச் செல்ல முடியாது…” என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இருக்க அண்மைக் காலமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சிறுபான்மை மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ‘சமூக நலனை முன்னிறுத்தியே மக்கள் காங்கிரஸ் முடிவெடுக்கும்’ என மேடைகளில் அறிவித்திருந்தார்.
எனினும், அவர்கள் சமூக நலனுக்காக அவர்கள் தீர்மானம் எடுக்கவில்லை என்பது கடந்த 5ம் திகதி அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்கள், சமூக முன்னோடிகள், புத்திஜீவிகள் அழைக்கப்பட்டு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது பற்றிய கருத்தறியும் நிகழ்வில் தெட்டத் தெளிவாக புரிந்ததாக பரவலாக பேசப்படுகின்றது.
எல்லாம் ஒருவாறு முடிவுக்கு வர, நேற்றைய தினம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு சஜித் பிரேமதாசவுக்கு என்று உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
ஐக்கிய மக்கள் கூட்டணியில், றிஷாட் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று (15) பிற்பகல் 2 மணிக்கு இணையவுள்ளது.
எனினும் இறுதி வரைக்கும் சஜித் – ரிஷாத் ஒப்பந்தத்தில் என்ன உள்ளது என்பது தெரியப்படுத்தப்படவே இல்லையாம்.. அதனை கேட்கும் தைரியமும் உயர்பீட உறுப்பினர்களிடம் இருக்கவும் இல்லையாம் என அறியக் கிடைத்தது.