பங்களாதேஷில் இப்போது முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்துள்ளது. அங்கே வன்முறையை முழுமையாகக் கட்டுப்படுத்த இடைக்கால அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மாணவர் அமைப்பினர் உடன் முகமது யூனுஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். மாணவர் அமைப்பினரை வெகுவாக பாராட்டிய அவர், முந்தைய ஹசீனாவின் அரசையும் கடுமையாக விமர்சித்தார்.
பங்களாதேஷில் கடந்த சில வாரங்களாக வன்முறை உச்சத்தில் இருந்தது. அங்கே வீதியில் திரண்ட மாணவர் அமைப்பினர் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
ஒரு கட்டத்தில் நிலைமை கையை மீறிச் சென்ற நிலையில், வேறு வழியில்லாமல் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவிற்குத் தப்பி வந்துவிட்டார்.
இதற்கிடையே பங்களாதேஷின் இடைக்கால அரசின் தலைவராகப் பதவியேற்ற நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்த மாணவர் அமைப்பினருக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்தார். மாணவர் அமைப்பினர் உடனான சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “இந்த விஷயத்தில் எனக்கு எந்தவொரு சந்தேகமும் இல்லை… மாணவர் தலைமையிலான புரட்சியால் மட்டுமே ஒட்டுமொத்த அரசும் சரிந்துள்ளது. நான் மாணவர் அமைப்பினரை மதிக்கிறேன். அவர்களைப் பாராட்டுகிறேன். நீங்கள் செய்தது விஷயம் மிகப் பெரியது. அதை அவ்வளவு சீக்கிரம் யாராலும் செய்துவிட முடியாது. இடைக்கால அரசை நான் வழிநடத்த வேண்டும் என நீங்கள் கேட்டுக் கொண்டதால் மட்டுமே இதற்கு நான் சம்மதித்தேன்” என்று அவர் தெரிவித்தார்.
பங்களாதேஷில் மாணவர் போராட்டத்தை முன்னின்று நடத்திய நஹித் இஸ்லாம் மற்றும் ஆசிப் மஹ்மூத் ஆகிய இருவரும் இப்போது இடைக்கால அரசியல் ஆலோசகர்களாகப் பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முதலில் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்திய அவர்கள், பிறகு அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட் நீதிபதி, அந்நாட்டின் மத்திய வங்கி தலைவர் ஆகிவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து அவர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர்.
இது குறித்துப் பேசிய முகமது யூனுஸ், “இங்கே உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் பங்களாதேஷ் மத்திய வங்கியின் தலைவர் உட்பட உயர் பதவியில் இருந்தவர்கள் ராஜினாமா செய்தனர். ஆனால், அவை எல்லாமே சட்டப்பூர்வமாகவே நடந்துள்ளது. பங்களாதேஷிற்கு புதிய நீதிமன்ற அமைப்பு வேண்டும் என்று மாணவர் அமைப்பினர் விரும்புகின்றனர். இதன் காரணமாகவே தலைமை நீதிபதி பதவி விலக வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தனர். சட்டப்பூர்வமாகவே அனைத்தும் நடந்தது” என்று அவர் தெரிவித்தார்.
ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பங்களாதேஷத்தை விட்டு வெளியேறிவிட்ட நிலையில், அதை மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசிய முகமது யூனுஸ், “இப்போது அசுரன் காலி.. இங்கிருந்து போய்விட்டான்.. எனவே, மாணவர் அமைப்பினர் போராட்டங்களை முழுமையாகக் கைவிடலாம்” என்றார்.
அதேநேரம் இடைக்கால அரசுக்கு உள்ள சிக்கல்கள் குறித்துப் பேசிய அவர், “பங்களாதேஷில் இப்போது அமைந்துள்ளது ஒரு இடைக்கால அரசு தான். முழு அரசு இல்லை. இடைக்கால அரசுக்குப் பரந்த அதிகாரங்கள் இல்லை. மேலும் நாட்டை மீட்டுக் கொண்டு வர பல கடினமான முடிவுகளை எடுக்க நேரிடும். இப்போது எல்லாரும் ஓகே என்பார்கள். ஆனால், கடினமான முடிவுகளை எடுக்கத் தொடங்கும் போது சிலருக்கு அவை பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது. ஆனால், அரசை நடத்தும் போது ஒரே நேரத்தில் எல்லாரையும் திருப்திப்படுத்த முடியாது” என்றார்.