ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார பேரணி எதிர்வரும் சனிக்கிழமை அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளது.
அநுராதபுரம் சல்காடு மைதானத்தில் பேரணி நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க ஒன்றிணைந்த குழு உட்பட இம்முறை ஜனாதிபதிக்கு ஆதரவான கட்சிகள் மற்றும் குழுக்களின் பிரதிநிதிகள் இந்த பேரணியில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் கட்டான ஆசன அமைப்பாளராக கடமையாற்றிய முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க இணைந்து கொண்டுள்ளார்.
விஜித் விஜயமுனி சொய்சா நேற்று பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழர் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நேற்று (12) பிற்பகல் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது வடக்கில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவான புதிய கூட்டணியை உருவாக்கும் நிகழ்வு எதிர்வரும் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் இணைந்து இந்த புதிய கூட்டணியை அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இன்று பொதுஜன ஐக்கிய முன்னணியை அமைப்பதற்கு செயற்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்சன யாப்பா குறிப்பிட்டுள்ளார்.